பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?!-எட்டயபுரத்து கவிஞனுக்கு 141-வது பிறந்த நாள்.

சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்ட மகாகவி பாரதி.

கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்ட மகாகவி பாரதி.

தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர், உ. வே. சாமிநாதையர், வ. உ. சிதம்பரம் பிள்ளை மற்றும் மகான் அரவிந்தர் ஆகியோர் இவரின் சமகாலத்தைய மனிதர்கள்.

தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும், கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவருடைய கவித்திறனைப் பாராட்டி “பாரதி” என்ற பட்டம் எட்டப்ப நாயக்கர் மன்னரால் எட்டயபுரம் அரச சபையால் வழங்கப்பட்டது.

தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்துள்ளார். பழந்தமிழ்க் காவியங்களின் மீது தனி ஈடுபாடு கொண்டவர். அழகியல் உணர்வும், தத்துவ சிந்தனைகளும் ஒருங்கே கொண்டவர்.

அதனால்தான் “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவ தெங்கும் காணோம்” என்று உலகமறிய உரக்கச் சொன்னார்.

“ தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?”-என்று சூளுரைத்தார்.

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்னவாயினும் புண்ணியங்கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்!-என்று சொல்லக் கூடிய துணிச்சலும், நேர்மையும், ஒழுக்கமும், சமூக அக்கறையும் அன்றைய காலக்கட்டத்தில் மகாகவி பாரதி ஒருவனுக்கே இருந்தது. ஆம், கொடிய வறுமையிலும் நேர்மையாக வாழ்ந்த மனிதன்.

கவிதை எழுதுபவன் கவியன்று, கவிதையே வாழ்க்கையாக உடையோன்; வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன் அவனே கவிஞன். அந்த வகையில் நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்!- என்று தமது இறுதி மூச்சு வரை வாழ்ந்து காட்டியவர்.

இந்திய விடுதலைப் போராட்டத்தையே பாரதப் போராகவும், பாஞ்சாலியை பாரத தேவியாகவும் உருவகப்படுத்தி மகாகவி பாரதி படைத்த படைப்புதான் பாஞ்சாலி சபதம். அழகிய இலக்கிய நயத்தையும், மிக அழகான கவிநயத்தையும் கொண்ட தமிழின் அழியாக் காவியமாக “பாஞ்சாலி சபதம்” விளங்குகிறது.

மகாகவி பாரதியின் பாடல்களை பிரிட்டிஷ் ஆட்சிக்குட்பட்டு இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த பர்மா மாகாண அரசு தடைசெய்தது. இதனைப் பின்பற்றி சென்னை மாகாணத்தின் காவல்துறை உத்தரவு மூலம் மகாகவி பாரதியின் பாடல்கள் தடைசெய்யப்பட்டு புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மாகாணச் சட்ட சபையில் காத்திரமான விவாதம் 1928 ஆம் ஆண்டு அக்டோபர் 8,9 தேதிகளில் நடந்தது. தீரர் சத்திய மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த விவாதத்தில் இலக்கியம் சார்ந்த பல கருத்துகள் பதிவாகியுள்ளன.

சின்னசாமி ஐயர்- இலக்குமி அம்மாள் தம்பதியினருக்கு டிசம்பர் 11, 1882-ல் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் பிறந்த மகாகவி பாரதிக்கு இன்று 141 -வது பிறந்த நாள்.

ஆம், பாரதி காட்டிய வழியில் நாம் தொடர்ந்துப் பயணிப்போம்..!

Dr.துரை பெஞ்சமின்.

–Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com


Leave a Reply