மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திரசிங் ‘ஒரு வாரம், ஒரு ஆய்வகம்’ என்ற தனித்துவமான பிரச்சாரத்தை தொடங்கி வைத்து அதற்கான இலச்சினையை புதுதில்லியில் வெளியிட்டார்.
நாடு முழுவதும் உள்ள சிஎஸ்ஐஆர் எனப்படும் அறிவியல் தொழிலக ஆய்வக கவுன்சிலின் 37 ஆய்வகங்கள் தங்களது கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பங்களை பிற ஆய்வகங்களுக்கும் பங்குதாரர்களுக்கும் தெரிவிக்கும் வகையில் இந்தப் பிரச்சாரம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர், கடந்த 2014 மே மாதம் முதல் பிரதமர் நரேந்திர மோடி அனைத்து அறிவியல் முயற்சிகளுக்கும் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவால் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைகள் சூழலில் இந்தியா தினமும் புதிய உச்சங்களை எட்டி வருவதாக அவர் தெரிவித்தார்.
மேலும், இந்தியாவின் அறிவியல் அணுகுமுறை நாளுக்கு நாள் முன்னேறி வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. சர்வதேச புதுமைகள் கண்டுபிடிப்பு தர வரிசையில் 2015 ஆம் ஆண்டில் 81 வது இடத்தில் இருந்த இந்தியா 2022 ஆம் ஆண்டில் 40 வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. அறிவியல் துறையில் உலகில் வேகமாக முன்னேறி வரும் நாடுகளில் இந்தியாவும் வளர்ந்து வருகிறது என்ற 108 வது இந்திய அறிவியல் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியின் கூற்றுகளை மேற்கோள் காட்டி மத்திய அமைச்சர் பேசினார்.
தொடர்ந்து, ஒரு வாரம் ஒரு ஆய்வகம் பிரச்சாரத்தில் 37 சிஎஸ்ஐஆர் ஆய்வகங்கள் தங்களது தனித்துவ கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களை வெளிப்படுத்துவதோடு தொழிலகம் மற்றும் ஸ்டார்ட் அப் சந்திப்பு, மாணவர்கள், சமுதாய இணைப்பு ஆகியவை நடக்க உள்ளன என்று தெரிவித்தார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குனர் டாக்டர் கலைச்செல்வி இந்த பிரச்சாரம் சிஎஸ்ஐஆர்- இன் வெற்றிகளை இந்திய மக்களுக்கும் உலகிற்கும் எடுத்துரைக்கும். மேலும் பிரதமரின் கனவான 2047 ஆண்டிற்குள் மேக் இன் இந்தியா புதுமை கண்டுபிடிப்பு முனையமாக இந்தியாவை மாற்றும் வகையில் சிஎஸ்ஐஆர் ஆய்வகங்கள் தங்களின் பங்களிப்புகளை தொடர்ந்து வழங்கும் என தெரிவித்தார்.
திவாஹர்
எம். பிரபாகரன்