வாஷிங்டனில் 2023, ஜனவரி 10, 11 ஆகிய நாட்களில் நடைபெற்ற இந்தியா – அமெரிக்கா இடையே அமைச்சர்கள் நிலையிலான 13-வது வர்த்தகக் கொள்கைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் அமெரிக்கா சென்றிருந்தார். பிரதிநிதிகள் அளவிலான பேச்சுக்களுக்கு முன்பு வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர், அமெரிக்க வர்த்தக தூதர் திருமதி கேத்தரீன் தாய்-உடன் பேச்சு நடத்தினார். இரு நாடுகளிலும் பணியாற்றும் மக்கள் பயன் பெறும் வகையில் இருதரப்புப் பொருளாதார நட்புறவை மேம்படுத்துவதிலும், இருதரப்பு வர்த்தக நட்புறவை வலுவடையச் செய்வதிலும், வர்த்தக கொள்கைக் கூட்டம் முக்கியத்துவம் பெறுவதாக அமைச்சர்கள் சுட்டிக்காட்டினார்கள். இக்கூட்டத்திற்கு பிறகு கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.
2021-ஆம் ஆண்டில் சரக்கு மற்றும் சேவை துறையில் இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் அதிகரித்ததாகவும், அது 160 பில்லியன் டாலர் அளவை அடைந்தது குறித்தும் அமைச்சர்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.
கடந்த முறை நடைபெற்ற வர்த்தகக் கொள்கைக் கூட்டத்திற்கு பின், மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பணிக்குழுக்களின் நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.
இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவத்தை வரவேற்பதாக கூறிய அமெரிக்க வர்த்தக தூதர் திருமதி கேத்தரீன் தாய், வர்த்தகம் மற்றும் முதலீட்டை பணிக்குழுவில் இணைந்து செயல்படும் தருணத்தை அமெரிக்கா எதிர்நோக்கியிருப்பதாகக் குறிப்பிட்டார்.
வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், அமெரிக்க வர்த்தகத்துறை அமைச்சர் திரு ஜினா ரெய்மோண்டோவுடனும் பேச்சு நடத்தினார். அத்துடன், பல்வேறு முன்னணி தொழில் நிறுவனத் தலைவர்களுடன் அவர் விவாதித்தார்.
எம்.பிரபாகரன்