மத்தியப் பிரதேசத்தின் முன்னேறும் மாவட்டமான விதிஷா, ஸ்டார்ட் அப்கள் வழங்கும் புதுமையான 5ஜி பயன்பாட்டு சேவைகளை களத்தில் பல்வேறு பிரிவுகளில் பயன்படுத்திக் காட்சிப்படுத்திய இந்தியாவின் முதல் மாவட்டமாக மாறியுள்ளது. இது விதிஷா மாவட்ட நிர்வாகம் மற்றும் தொலைத்தொடர்பு துறையின் டெலிமேடிக்ஸ் மேம்பாட்டு மையம் (C-DOT) ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாநில அரசுகள், சீர்மிகு நகரங்கள், முன்னேறும் மாவட்டங்கள், வளரும் தொழில்கள் போன்றவற்றில் 5ஜி தொழில்நுட்ப அடிப்படையிலான ஸ்டார்ட் அப் புதுமைப் பயன்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் புதுமையான தீர்வுகள் தொடர்பாக இதில் கவனம் செலுத்தப்படுகிறது. மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷாவில் உடல்நலம், விவசாயம், பால்பண்ணைத் தொழில், கல்வி, திறன் மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையில் 5 ஜி-யை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பயன்பாட்டு பரிசோதனைத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்பு துறையின் டெலிமேடிக்ஸ் மேம்பாட்டு மையத்துடன் இணைந்து ஸ்டார்ட் அப்களால் கீழ்க்கண்ட செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன:
• சூப்பர்சூட்டிக்கல்ஸ் (Superceuticals)- 5ஜி/4ஜி மூலம் இயக்கப்படும் உடனடி உடல் நலப் பரிசோதனை நடைமுறை
• அம்புபாட்: 5ஜி, 4ஜி மூலமான தானியங்கி ஆம்புலன்ஸ் நடைமுறை
• லோஜி-ஏஐ (LogyAI): கண்புரை நோயை விரைவாகவும் திறமையாகவும் பரிசோதிக்கும் நடைமுறை
• ஈசியோஃபை: நுரையீரல் மற்றும் மூளை ஸ்கேன் பரிசோதனைகளுக்கு (CT/XRAY போன்றவை) ஏஆர்/விஆர்- முப்பரிமாணக் காட்சிப்படுத்தல் தொடர்பான செயலிப் பயன்பாடு.
• டெக் எக்ஸ் ஆர் (TechXR): ஏஆர்/விஆர்- புதுமைக் கற்பித்தல் முறைகளுக்கான மேம்பட்ட கற்றல் மற்றும் கற்பித்தல் கருவி
• பிகேசி அக்ரிகேட்டர்ஸ்: ஃபசல் சலாஹ் செயலி (Fasal Salah App) -விவசாயம் தொடர்பான தகவல்களைத் தெரிந்து கொண்டு விவசாயிகள் முடிவு எடுக்க இது பயன்படும்
• துவார-சுரபி: தனித்துவமான பயோமெட்ரிக் அடையாளத்தைப் பயன்படுத்தி கால்நடைகளின் ஆரோக்கிய நிலையை கணித்தல் தொடர்பான முறை
• சி-டாட் (C-DOT – R&D Arm of DoT): தொலை ஆலோசனை மற்றும் மின்னணுக் கற்றல் தீர்வுகளை செயல்படுத்தும் அனைத்து தளங்களையும் ஒருங்கிணைக்கும் தளமாக இது உள்ளது.
5ஜி பயன்பாட்டு முதன்மைத் திட்டத்தின் கீழ் இந்தப் பயன்பாடுகள் 1 வருட காலத்திற்கு பயன்படுத்தப்படும். தேவைக்கேற்ப பின்னர் இது நீட்டிக்கப்படும்.. விதிஷா மாவட்டத்தில் பயனாளிகளுக்கு தடையில்லா சேவைகளை வழங்க இந்த டிஜிட்டல் தீர்வுகள் பாரத்நெட் பிராட்பேண்டால் செயல்படுத்தப்படும்.
எம். பிரபாகரன்