மத்திய வர்த்தகம், தொழில் நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், புதுதில்லியில் இன்று நடைபெற்ற 2022-ஆம் ஆண்டுக்கான தேசிய ஸ்டார்ட்அப் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று விருதுகைள வழங்கினார். விருது வென்றவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்த அவர், இந்த விருது அவர்களுக்கு ஊக்கம் அளித்து அவர்களின் பணிகளை மேலும் விரிவுப்படுத்தும் வகையில் அமையும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
அரசு தற்போது ஸ்டார்ட்அப் நிறுவனங்களைப் போலவே சிந்திப்பதாகவும் திறன்களை மேம்படுத்துவதில் தொடர்ந்து கவனம் செலுத்துவதாகவும் அவர் கூறினார். சவால்களை எதிர்கொள்ள, பிரதமர் திரு நரேந்திர மோடி, தலைமையிலான மத்திய அரசு, சிறந்த புதுமைக் கண்டுபிடிப்புகளை உருவாக்குவது மற்றும் அவற்றை வளர்ப்பது என இரண்டையுமே ஊக்குவிப்பதாக கூறினார்.
கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசு மேற்கொண்ட முன்முயற்சிகள் வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். திட்டங்கள் விரைவாகவும், திறன் மிக்க முறையிலும் செயல்படுத்தப்படுவதில் பிரதமர் அதிக கவனம் செலுத்துவதாக அமைச்சர் கூறினார். டிஜிட்டல் இந்தியா, 4ஜி மற்றும் 5ஜி சேவைகள் அறிமுகம், கிராமங்களில் அகண்ட அலைவரிசை இணைப்பு உள்ளிட்டவை ஸ்டார்ட்அப் சூழலை பெரிய அளவில் வளர்ச்சி அடையச் செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடர்பாக வலுவான தரவுகள் தேவை என்று அவர் வலியுறுத்தினார். இது அரசுக்கும், நிறுவனங்களுக்கும் இடையேயான தொடர்பை வலுப்படுத்தி, புதிய சிந்தனைகளை ஈர்க்கும் என அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய தொழில் வர்த்தகத்துறை இணை அமைச்சர் திரு சோம் பிரகாஷ், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நிதி அளித்தல் மற்றும் பல வகைகளில் அரசு துணை நின்று ஆதரவு அளிப்பதாக கூறினார்.
இன்றைய நிகழ்ச்சியின் போது, 41 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், 2 தொழில் பாதுகாப்பகங்கள், ஒரு வழிகாட்டி நிறுவனம் ஆகியவற்றுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. விருது வென்ற நிறுவனங்கள், 2-ம் நிலை மற்றும் 3-ம் நிலை நகரங்களைச் சேர்ந்தவையாகும். விருதுவென்ற ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு தலா ரூ.5 லட்சமும், தொழில் பாதுகாப்பகங்கள் மற்றும் வழிகாட்டி நிறுவனங்களுக்கு தலா ரூ.15 லட்சமும் வழங்கப்படுகிறது.
எம். பிரபாகரன்