ஜி20 தலைமைத்துவ கட்டமைப்பின் கீழ், இளைஞர் 20 உச்சிமாநாடு 2023-ஐ ஏற்பாடு செய்யும் பொறுப்பு மத்திய இளைஞர் நலத்துறையிடம் விடப்பட்டுள்ளது. இதனையொட்டி இளைஞர் நலத்துறை வரும் 6-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை அசாம் மாநிலம் குவஹாத்தியில் இளைஞர் 20 தொடக்க கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி நிறைவு நாளான 8-ந் தேதி நடைபெறும்.
ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஓராண்டு காலத்திற்கு இந்தியா 2022 டிசம்பர் 1-ந் தேதி ஏற்றது. உலகமே ஒரே குடும்பம் என்னும் மந்திரத்தையொட்டி, ஒரே பூமி ஒரே குடும்பம் ஒரே எதிர்காலம் என்னும் கருப்பொருளை இந்தியாவின் தலைமைத்துவம் வெளியிட்டுள்ளது.
இளைஞர் 20 என்ற நிகழ்ச்சி, ஜி20 அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிக்குழுக்களில் ஒன்றாகும். இந்த இளைஞர் 20 இந்தியா முழுவதும் நாளைய சிறப்பான எதிர்காலத்திற்கான வரைவை உருவாக்க கருத்துக்களை வரவேற்று விவாதிக்கும். ஜி20 முன்னுரிமைகள் குறித்த கருத்துக்களை இளைஞர்கள் வெளியிடுவதற்கான தளமாக இளைஞர் 20 உச்சிமாநாடு அமையும்.
இந்த தகவல்களை இளைஞர் நலத்துறை செயலாளர் திருமிகு மீட்டா ராஜீவ்லோச்சன் புதுதில்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பணிகளின் எதிர்காலம், பருவநிலை மாற்றம் மற்றும் பேரிடர் அபாயக்குறைப்பு, அமைதி கட்டமைப்பு மற்றும் நல்லிணக்கம், பகிரப்பட்ட எதிர்காலம், சுகாதாரம், நலவாழ்வு மற்றும் விளையாட்டு ஆகிய ஐந்து அம்சங்கள் இளைஞர் 20-ன் கருப்பொருட்களாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
திவாஹர்