நார்வேயின் தொழில் வர்த்தகத் துறை அமைச்சர் திரு ஜான் கிறிஸ்டியன் வெஸ்ட்ரே-யை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிப்பாதைகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் புதுதில்லியில் வியாழனன்று (09.02.2023) சந்தித்தார். பசுமைத் துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து, மாலுமிகள் பயிற்சி, எதிர்கால கப்பல் போக்குவரத்துக்கு பசுமை அமோனியா, ஹைட்ரஜன் போன்ற மாற்று எரிபொருள்கள் பயன்பாடு, நீடிக்க வல்ல கப்பல் மறுசுழற்சி உள்ளிட்ட இருதரப்பு நலன்சார்ந்த விஷயங்கள் குறித்து இரு அமைச்சர்களும் விவாதித்தனர். துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறையில் கரியமிலவாயு வெளியேற்றத்தை முற்றிலுமாக தடுக்கும் தொழில் நுட்பங்களை அமல்படுத்தும் தங்களின் உறுதிப்பாட்டை இரு நாடுகளும் வலியுறுத்தின.
நார்வே அமைச்சரின் வருகை இரு நாடுகளுக்கிடையேயான கப்பல் போக்குவரத்து மற்றும் துறைமுகங்கள் துறையில் வளர்ந்து வரும் கடல்சார் ஒத்துழைப்பை ஊக்கப்படுத்தும் என்று இந்த சந்திப்பின் போது திரு சர்பானந்த சோனாவால் தெரிவித்தார். ஹைட்ரஜன் எரிபொருள் கொண்ட கப்பல்கள், குறைந்த அளவு கரியமிலவாயுவை வெளியேற்றும் திரவ இயற்கை எரிவாயு பயன்படுத்தப்படும் கப்பல்கள், கரியமிலவாயு வெளியேறாத சூரிய சக்தி மின்கலன் போன்றை குறித்த அனுபவங்களை நார்வே பகிர்ந்துகொள்ளும் என்று இந்தியா எதிர்பார்ப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
நார்வே நாட்டின் தூதுக்குழுவில் தொழில் வர்த்தகத் துறை மூத்த அதிகாரிகள், இந்தியாவுக்கான நார்வே தூதர், பல்வேறு நார்வே நிறுவனங்களின் அதிகாரிகள் இடம்பெற்றிருந்தனர். இந்திய தரப்பில், மத்திய அமைச்சருடன் தேசிய கப்பல் போக்குவரத்து வாரியத் தலைவர், மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிப்பாதைகள் துறையின் கூடுதல் செயலாளர் மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
எஸ். சதிஷ் சர்மா