குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு லக்னோவில் உள்ள பாபாசாஹேப் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் 10-வது பட்டமளிப்பு விழாவில் இன்று உரையாற்றினார்.
பட்டமளிப்பு உரை நிகழத்திய குடியரசுத் தலைவர், இன்று இந்தியா உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட் அப் சுற்றுச்சூழல் அமைப்பைக் கொண்டுள்ளது. அனைத்து கல்வி நிறுவனங்களும், குறிப்பாக பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் இந்த சூழல் அமைப்பை முழுமையாகப் பயன்படுத்தி, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு தங்கள் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும். அவர்களின் முயற்சிகள் இந்தியாவை புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பத் துறையில் முன்னணி நாடாக மாற்றுவதில் முக்கிய பங்களிப்பாக இருக்கும் என்று கூறினார்.
உத்தரப்பிரதேசத்தின் உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு-2023 மூலம் முதலீடு மற்றும் வணிகத்திற்கான சாதகமான சூழல் ஏற்பட்டிருப்பதாக கூறிய குடியரசுத் தலைவர், கல்வியை இந்த சாதகமான சூழலுடன் இணைக்குமாறு வலியுறுத்தினார். நமது பல்கலைக்கழகங்கள் மக்கள் நலனுக்காக புதிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும் மையமாகவும், நான்காவது தொழில் புரட்சியின் மையமாகவும், ஸ்டார்ட் அப்களுக்கான தொழில் பாதுகாப்பு மையமாகவும் தங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். நமது கல்வி நிறுவனங்களும் புதிய புரட்சி, சமூக முன்னேற்றம் மற்றும் சமத்துவத்தின் தூதுவர்களாக மாறினால் அது மகிழ்ச்சிகரமான சூழலாக உருவெடுக்கும் என்று அவர் தெரிவித்தார்.
பாபாசாஹேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர், ஏழை, எளிய மக்களுக்குக் கல்வி அளிப்பது பல்கலைக்கழகத்தின் அடிப்படைக் கடமை என்று நம்பியதாக குடியரசுத் தலைவர் கூறினார். ஒரு கல்வி நிறுவனம் பாரபட்சமின்றி அனைவருக்கும் தரமான கல்வியை வழங்க வேண்டும். பாபாசாகேப் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகம் 50 சதவீத இடஒதுக்கீட்டின் மூலம் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் முன்னேற்றத்திற்காக பாராட்டத்தக்க பணிகளைச் செய்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டார். இந்தப் பல்கலைக்கழகம் பாபாசாஹேப்பின் கொள்கைகளின்படி நாட்டிலும் மாநிலத்திலும் கல்வியை தொடர்ந்து பரப்பும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மாணவர்களுக்கு, பட்டமளிப்பு விழா மிகவும் முக்கியமானதொரு சந்தர்ப்பமாகும் என்று குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். இந்த நாளில், அவர்கள் பல வருட கடின உழைப்பின் பலனைப் பெறுகிறார்கள். மாணவர்கள் வாழ்க்கையில் என்னவாக விரும்புகிறார்களோ, அதற்காக அவர்கள் இன்றிலிருந்தே உழைக்க வேண்டும் என்றும், அவர்களின் இலக்கை எப்போதும் மனதில் இருந்து அகற்றிவிடக்கூடாது என்றும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்க இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த விரும்புவதாகவும் அவர் கூறினார். சில மாணவர்கள் நல்ல ஆசிரியர்கள்/பேராசிரியர்கள் ஆக வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார். கல்வியும், கற்பித்தலும் ஒன்றோடொன்று தொடர்புடையது. சிறந்த கல்வி முறைக்கு சிறந்த ஆசிரியர்கள் தேவை. நமது நம்பிக்கைக்குரிய மாணவர்கள், கற்பித்தலைத் தொழிலாக ஏற்று, நாட்டின் எதிர்காலத்தை பிரகாசமாக்குவதில் தங்களின் மதிப்புமிக்க பங்களிப்பை வழங்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் கேட்டுக்கொண்டார்.
இன்று பட்டம் பெறும் மாணவர்கள் கல்வி மற்றும் அறிவின் பலத்தால் வாழ்க்கையில் நிறைய முன்னேறுவார்கள் என்று தான் நம்புவதாக குடியரசுத் தலைவர் கூறினார். ஆனால் இதனுடன், அவர்கள் நமது மதிப்புகள் மற்றும் கலாச்சாரத்துடன் இணைந்திருக்க வேண்டும், அப்போதுதான் அவர்கள் அர்த்தமுள்ள மற்றும் திருப்திகரமான வாழ்க்கையை வாழ முடியும். எப்போதும் சிறந்து விளங்க பாடுபடுங்கள் என்று அறிவுரை வழங்கிய குடியரசுத் தலைவர். ஒரு நெருக்கடியான சூழ்நிலை வரும்போதெல்லாம், ஒரு தீர்வைக் கண்டுபிடிப்பதைப் பற்றி சிந்தித்து, அதை ஒரு வாய்ப்பாகக் கருதுங்கள். இது உங்களது ஆளுமையை மேம்படுத்தும் என்று கேட்டுக்கொண்டார்.
திவாஹர்