இந்திய தகவல் பணி பயிற்சி அதிகாரிகள் குழுவினருடன் குடியரசு துணைத் தலைவர் மாளிகையில், குடியரசு துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் இன்று கலந்துரையாடினார். ஜனநாயகம் மற்றும் தேசியவாதத்தின் உண்மையான பாதுகாவலர்களாக திகழவேண்டும் என்று அப்போது அவர்களிடம் குடியரசு துணைத்தலைவர் அறிவுறுத்தினார். கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் தவறான தகவல்களை தடுத்து, உண்மையான தகவல்களை வழங்கியதிலும், தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் காணப்பட்ட தயக்கங்களை களைவதிலும், ஐஐஎஸ் அதிகாரிகளின் பங்களிப்பை திரு ஜக்தீப் தன்கர் பாராட்டினார். தவறான தகவல்கள் தற்போது அதிகம் பரவுவது தொடர்பாக எப்போதுமே விழிப்புடன் இருக்க வேண்டும் என்று இளம் பயிற்சி அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
இந்தியா வாய்ப்புகள் மற்றும் முதலீடுகளின் நிலம் என்று கூறிய அவர், இதை மேலும் வலுப்படுத்த திறம்பட்ட தகவல் தொடர்பு அவசியம் என்று குறிப்பிட்டார். தகவல்களை வேண்டுமென்றே திணித்தல் என்பது படையெடுப்பின் மற்றொரு வழி என்று அவர் கூறினார். இதைத் தடுக்க துணிச்சலான மற்றும் திறம்பட்ட நடவடிக்கைகள் தேவை என்றும் அவர் தெரிவித்தார். இந்தியாவின் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும் என்று கூறிய அவர், பொய்யாக கூறப்பட்ட புனைவுகளுக்கு எதிராக திறம்பட்ட முறையில் போராட வேண்டியது அவசியம் என்று கூறினார். தாமதமாக பதில் கொடுக்கும் நடைமுறை இனி இருக்கக் கூடாது என்றும் இளம் அதிகாரிகளிடம் அவர் கூறினார்.
இந்திய தகவல் பணி என்பது மத்தியப் பிரிவில் முதல் நிலை சேவைப் பணிகளில் ஒன்றாகும். இந்தப் பணியைச் சேர்ந்தவர்கள் மத்திய அரசின் ஊடக மேலாளர்களாகப் பணியாற்றுகின்றனர். பல்வேறு நிலைகளில் உள்ள ஐஐஎஸ் அதிகாரிகள், அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்களை மக்களுக்கு விரிவாக எடுத்துரைப்பதன் மூலம் அரசுக்கும், மக்களுக்கும் இடையே சிறந்த இணைப்பு பாலமாகச் செயல்படுகின்றனர்.
குடியரசு துணைத் தலைவருடனான இன்றைய சந்திப்பில், குடியரசு துணைத் தலைவரின் செயலாளர் திரு சுனில்குமார் குப்தா, தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு அபூர்வ சந்திரா, இந்திய மக்கள் தொடர்பு கல்வி நிறுவனத்தின் (இண்டியன் இன்ஸ்ட்டியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் – ஐஐஎம்சி) தலைமை இயக்குநர் திரு சஞ்சய் திவேதி, 2020-2021-2022 தொகுதிகளின் ஐஐஎஸ் பயிற்சி அதிகாரிகள் மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
எம்.பிரபாகரன்