இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதல் தொடராமல் இருக்க இலங்கை அரசை, மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. கே.வாசன் அறிக்கை.

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது,

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நாகை மீனவர்கள் 6 பேர் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவில் கோடியக்கரைக்கு தென்கிழக்கே இந்திய எல்லையில் நாகை மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு 4 படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்களின் படகுகள் மீது தாக்குதல் நடத்தினர்.

மேலும் மீனவர்களின் படகில் பாய்ந்து மீனவர்களை கத்தியால் தாக்கியும், மீன்களையும், மீன்பிடிச்சாதனங்களையும் கொள்ளை அடித்துச் சென்றனர். இத்தாக்குதலில் மீனவர் ஒருவரின் விரல்கள் வெட்டப்பட்டது.

இந்நிலையில் அருகில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்களின் உதவியால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் கரைக்கு வந்து, நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். படுகாயமடைந்த. விரல்கள் துண்டிக்கப்பட்ட மீனவர் கோயம்புத்தூர் மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு தீவிர உயர்தர சிகிச்சை அளித்து, அவர்கள் விரைவில் குணமடைய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாகை மீனவர்கள் தாக்கப்பட்டதை அறிந்த நாகை மாவட்ட மீனவர்களின் குடும்பமும், தமிழக மீனவர்களும் மிகவும் துயரமுற்றுள்ளனர்.

இந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு, இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும். மேலும் இது போன்ற தாக்குதல் சம்பவம் இனியும் தொடராமல் இருக்க இலங்கையிடம் மத்திய அரசு கண்டிப்போடு தெரிவிக்க வேண்டும்.

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்கொள்ளையர்கள் அவ்வப்போது தாக்குதல் நடத்தும் சம்பவம் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது மத்திய அரசின் கடமை.

தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும்போது அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கக்கூடிய வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய மாநில அரசுகள் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடித் தொழிலைப் பாதுகாக்க, உறுதுணையாக இருக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எஸ். திவ்யா

Leave a Reply