புதுதில்லி, பிப்ரவரி 17, 2023 மத்திய ஜவுளித்துறை சார்பில் மும்பையில் பிப்ரவரி 22-ம் தேதி முதல் 24-வரை தொழில் சார்ந்த ஜவுளிகள் டெக்னோடெக்ஸ் 2047 நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இந்திய தொழில்வர்த்தகசபை கூட்டமைப்புடன் இணைந்து நடத்தப்படும் இந்தநிகழ்ச்சியில், தொழில் சார்ந்த ஜவுளிகளின் வளர்ச்சி குறித்து பல்வேறு கோணங்களில் விவாதிக்கப்பட உள்ளது. தொழில் சார்ந்த ஜவுளிகள் என்பது ஆயத்த ஆடைகள் தவிர, மருத்துவம், பாதுகாப்பு, வேளாண்மை, தொழிற்சாலைகள் உள்ளிட்ட துறைகளில் பயன்படுத்தப்படும் ஜவுளிகளை உள்ளடக்கியவை.
கடந்த 2011 ஆம் ஆண்டு முதன்முறையாக டெக்னோடெக்ஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கொரோனாப் பெருந்தொற்று காலத்திற்குப்பிறகு முதல்முறையாக தற்போது இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் கண்காட்சி, மாநாடு, கருத்தரங்கம், முதலீட்டாளர்கள் விவாதம், மாநில மற்றும் மத்திய அரசுகளின் துறைசார்ந்த விவாதங்கள் உள்ளிட்டவை இடம்பெறும்.
மஹாராஷ்டிர மாநிலத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், கர்நாடகா, தமிழ்நாடு, மேற்குவங்கம், மற்றும் மத்திய பிரதேசத்தை சேர்ந்த பிரதிநிதிகளும், பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர்.
தொழில்சார்ந்த ஜவுளி கண்காட்சியில் தைவான், ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து, தென்கொரியா, ரஷ்யா, உள்ளிட்ட 30-ம் மேற்பட்ட நாடுகளைசேர்ந்த 150 நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன.
இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கு இடையேயான தொழில் சார்ந்த ஜவுளியின் வர்த்தகம் மற்றும் முதலீட்டை முன்னிறுத்தியே டெக்னோடெக்ஸ் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
மத்திய வர்த்தகம், தொழில், நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல், மத்திய ஜவுளி மற்றும் ரயில்வேத்துறை இணைய அமைச்சர் திருமதி. தர்ஷனா ஜர்தோஷ் ஆகியோர் டெக்னோடெக்ஸ் நிகழ்ச்சியில் உரையாற்றுகின்றனர்.
எஸ். சதிஷ் சர்மா