21 வயதிற்கு உட்பட்டோருக்கான 2-வது கேலோ இந்தியா மகளிர் ஹாக்கி லீக் தொடரில் புதுதில்லியில் உள்ள மேஜர் தயான்சந்த் தேசிய மைதானத்தில் இன்று தொடங்கியது. இதனை ஒலிம்பிக் தங்கப்பதக்க வீரரும், அர்ஜுனா விருதாளருமான திரு. ஹர்பிந்தர் சிங், ஒலிம்பிக் பதக்க வீரரும், அர்ஜுனா விருதாளருமான திரு. தேவேஷ் சவ்ஹான் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
மொத்தம் 2 போட்டிகள் இன்று நடத்தப்பட்டதில், இந்திய விளையாட்டு ஆணையத்தின் ஏ அணி, சல்யூட் ஹாக்கி அணியை 13-0 என்ற கணக்கில் வீழ்த்தியது. அதேபோல், ப்ரிதம் சிவட்ச் அணி 11-0 என்ற கணக்கில் ஹெச்ஐஎம் ஹாக்கி அகாடமி அணியைத் தோற்கடித்தது.
இத்தொடரின் தொடக்க விழாவில் பேசிய ஹர்பிந்தர் சிங், மத்திய அரசின் சிறப்பான முயற்சியால் நடத்தப்படும் கேலோ இந்தியா போட்டிகள் மூலம், திறமை மிக்க விளையாட்டு வீரர்களை அடையாளம் காண்பதுடன், இந்தியாவுக்கு மேலும் ஒலிம்பிக் பதக்கங்களை வெல்ல முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.
16 மற்றும் 21 வயதிற்கு உட்பட்டோருக்கான மகளிர் கேலோ இந்தியா லீக் தொடர்களை கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் வெற்றிகரமாக நடத்தியமைக்காக கேலோ இந்தியா மற்றும் இந்திய விளையாட்டு ஆணையத்திற்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய தேவேஷ் சவ்ஹான், திறமைமிக்க வீரர்களுக்கு மத்திய அரசு பல்வேறு வாய்ப்புகளை வாரி வழங்குவதாகவும், கேலோ இந்தியா லீக் தொடர்களில் பங்கேற்பதன் மூலம் விளையாட்டு வீரர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக்கொண்டு கடுமையாக உழைத்து, விளையாட்டுத்துறையில் இந்தியாவின் கனவை நனவாக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் இந்தியா ஹாக்கி அணி மேலாளர் பியூஷ் துபே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திவாஹர்