மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் சார்பில், தேசிய உடல்உறுப்பு மற்றும் திசுக்கள் மாற்று அறுவை சிகிச்சை அமைப்பின் (என்ஓடிடிஓ) அறிவியல் உரையாடல் 2023 மாநாடு இன்று புதுதில்லியில் நடைபெற்றது. உயிர்களைப் பாதுகாப்பதற்காக, உடல் உறுப்பு மற்றும் திசுக்கள் மாற்று அறுவை சிகிச்சை சார்ந்த பணிகளில் ஈடுபட்டுள்ள அனைத்து மருத்துவ நிறுவனங்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவரும் முயற்சியாக இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் பங்கேற்றுப் பேசிய மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் திரு. ராஜேஷ் பூஷன், கடந்த ஆண்டில்( 2022) 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உடல் உறுப்பு மற்றும் திசுக்கள் மாற்று அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு சாதனை படைக்கப்பட்டிருப்பதாகப் பெருமிதம் தெரிவித்தார். இதன்மூலம் அந்த ஆண்டின் உடல் உறுப்பு மற்றும் திசுக்கள் மாற்று அறுவைசிகிச்சை விகிதம் 27 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய அளவிலான உடல் உறுப்பு மற்றும் திசுக்கள் மாற்று அறுவை சிகிச்சை அமைப்பு போன்று, மாநில மற்றும் மண்டல அளவிலான அமைப்புகளும் இருப்பதைச் சுட்டிக்காட்டினார்.
முதியோர் மக்கள் தொகை அதிகம் கொண்ட இந்தியாவில், அவர்களின் தரமான வாழ்க்கையை உறுதி செய்ய, நமது தொலைத்தொடர்பு மற்றும் விழிப்புணர்வு செயல்திட்டங்களை மேம்படுத்துவது முக்கியத்தும் பெருவதுடன், உறுப்பு தானம் செய்ய அனைவரும் முன்வர வேண்டியது அவசியம் என்றார்.
மருத்துவ நிறுவனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்த அவர், தற்போது 640 மருத்துவனைகள், மருத்துவக் கல்லூரிகள் இருந்தபோதிலும், அவற்றில், சிலவற்றில் மட்டுமே உடல்உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதைச் சுட்டிக்காட்டினார்.
எனவே மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் நிறுவனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்ட திரு. ராஜேஷ் பூஷன், அத்துடன் மருத்துவத்துறை நிபுணர்கள் பயிற்சியுடன், நம்மிடம் உள்ள தொழில்நுட்ப உட்கட்டமைப்பு வசதிகளையும் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்த மாநாட்டில், அந்த அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் வி.ஹெகலி ஷிமோமி, என்ஓடிடிஓ இயக்குநர் டாக்டர் ரஜ்னீஷ் செஹாய் மற்றும் மருத்துவத்துறை நிபுணர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
திவாஹர்