உத்தரகாண்ட் வேலைவாய்ப்பு முகாமில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் இன்று உரையாற்றினார்.
அங்கு திரண்டிருந்தோரிடையே உரையாற்றிய பிரதமர், இன்று பணிநியமன ஆணைகளை பெற்றவர்களுக்கு புதிய உதயம் ஏற்பட்டுள்ளதாக கூறினார். இது வாழ்க்கையை மாற்றும் வாய்ப்பாக மட்டும் அல்லாமல் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்தும் ஊடகமாக மாறியுள்ளது. நாட்டில் கல்வித்துறையில் புதிய சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய பிரதமர், பணி நியமன ஆணை பெற்றவர்களில் பெரும்பாலானோர் கல்வித்துறையில் பணியாற்றுவார்கள் என்று கூறினார். “புதிய தேசியக் கல்விக் கொள்கை இந்திய இளைஞர்களை புதிய நூற்றாண்டுக்கு தயார்படுத்துகிறது” என்று கூறிய பிரதமர், இந்த உறுதிப்பாட்டை முன்னெடுத்துச்செல்லும் பொறுப்பு உத்தரகாண்ட் இளைஞர்களுக்கு உள்ளது என குறிப்பிட்டார்.
“ஒவ்வொரு இளைஞரும் ஆர்வத்தின் அடிப்படையில் புதிய வாய்ப்புகளைப் பெறுவதற்கு மத்திய அரசும், உத்தரகாண்ட் அரசும் தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன” என்று கூறிய பிரதமர், அவர்கள் முன்னேறுவதற்கு சரியான வழிமுறைகளை பெறுகின்றனர் என்று குறிப்பிட்டார். இதே திசையில், அரசு பணிகளிலும், வேலைவாய்ப்பு இயக்கங்கள் மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார். கடந்த சில மாதங்களில் நாட்டில் லட்சக்கணக்கான இளைஞர்கள் மத்திய அரசு பணிகளுக்கு பணிநியமன ஆணைகளை பெற்றுள்ளதை பிரதமர் சுட்டிக்காட்டினார். இதில் உத்தரகாண்டும் இடம் பிடித்துள்ளது என்பதை அவர் வெளிப்படுத்தினார். இந்த வேலைவாய்ப்பு இயக்கங்கள் பிஜேபி ஆளும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பெருமளவில் நடைபெற்று வருவதாக அவர் கூறினார். “இன்று உத்தரகாண்டும் இதில் இடம் பெற்றிருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்று பிரதமர் கூறினார்.
மலைப்பகுதியைச் சேர்ந்த தண்ணீரும், இளைஞர்களும் அங்கேயே பயனளிப்பது இல்லை என்ற பழமொழியை உடைக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், உத்தரகாண்ட் இளைஞர்கள் தங்களது கிராமங்களுக்கு திரும்ப வேண்டும் என்பதில் தொடர் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டார். மலைப்பிராந்தியங்களில் சுயவேலைவாய்ப்புகளும், புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். உத்தரகாண்டில் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் முதலீடுகளை அதிகரிக்குமாறு கூறிய பிரதமர், புதிய சாலைகள் மற்றும் புதிய ரயில் பாதைகள் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதுடன் ஏராளமான வேலைவாய்ப்புகளையும் உருவாக்குகிறது என்றார். எங்குநோக்கினும் வேலைவாய்ப்புகள் ஊக்கம் பெற்று வருவதாக தெரிவித்த பிரதமர், கட்டுமான தொழிலாளர்கள், பொறியாளர்கள், மூலப்பொருள் தொழில்கள், கடைகள் ஆகியவற்றின் உதாரணத்தை எடுத்துரைத்தார். போக்குவரத்து துறையில் தேவை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுவதாக அவர் கூறினார். முன்பெல்லாம் உத்தரகாண்டைச் சேர்ந்த கிராமப்புற இளைஞர்கள் வேலை தேடி பெரிய நகரங்களுக்கு இடம்பெயர்ந்தனர் என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், ஆனால் இன்று ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கிராமங்களில் இணையதளம் மற்றும் டிஜிட்டல் சேவைகளை மேம்படுத்தும் மையங்களில் பணியாற்றி வருவதை சுட்டிக்காட்டினார். இந்த பணிகள் இந்தியாவில் முதல்முறையாக உத்தரகாண்டில் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
உத்தரகாண்டில் சுற்றுலாத்துறை விரிவடைந்து வருவதால் தொலைதூரப்பகுதிகளும், சாலை, ரயில் மற்றும் இணையதள சேவைகளால் இணைக்கப்பட்டுள்ளன என்று கூறிய பிரதமர், சுற்றுலா வரைபடத்தில் புதிய சுற்றுலா தலங்கள் வந்தவண்ணம் உள்ளதாக தெரிவித்தார். இதன் காரணமாக உத்தரகாண்ட் இளைஞர்கள், பெரிய நகரங்களுக்கு வேலைக்காக பயணிப்பதை விடுத்து, தற்போது தங்களது வீடுகளுக்கு அருகிலேயே வேலைவாய்ப்புகளை பெற்று வருகின்றனர் என்று அவர் கூறினார். சுற்றுலாத்துறையில் சுயவேலைவாய்ப்புகள் மற்றும் வேலைவாய்ப்பை ஊக்குவிப்பதில் முத்ரா கடன் திட்டம் முக்கிய பங்காற்றிவருவதாக அவர் தெரிவித்தார். கடைகள், உணவு விடுதிகள், விருந்தினர் மாளிகைகள் போன்ற உதாரணங்களை எடுத்துரைத்த பிரதமர், இத்தகைய தொழில்களுக்கு எந்தவித உத்தரவாதமுமின்றி ரூ.10 லட்சம் வரை கடன்கள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். நாடு முழுவதும் இதுவரை 38 கோடி முத்ரா கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. முதன் முறையாக சுமார் 8 கோடி இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக மாறியுள்ளனர் என்று பிரதமர் தெரிவித்தார். இதில், எஸ்சி, எஸ்டி, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த பெண்களும், இளைஞர்களும் அதிகளவில் உள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.
இந்த அமிர்தகாலத்தில் இந்திய இளைஞர்களுக்கு அற்புதமான வாய்ப்புகள் வாய்க்கப்பெற்றுள்ளதாக கூறிய பிரதமர், இளைஞர்கள் தங்களது சேவைகள் மூலம் நாட்டின் வளர்ச்சியை விரைவுப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு தமது உரையை நிறைவு செய்தார்.
எஸ். சதிஷ் சர்மா