ரயில்வே பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள உலகளாவிய ஒத்துழைப்பிற்கு சர்வதேச ரயில்வே கூட்டமைப்பு அழைப்பு.

சர்வதேச ரயில்வே கூட்டமைப்பின் (யுஐசி) 18வது உலகளாவிய பாதுகாப்பு மாநாடு 2வது நாளாக ஜெய்ப்பூரில் இன்றும் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு ரயில்வே பாதுகாப்புப் படையும் சர்வதேச ரயில்வே கூட்டமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. மூன்றாவது முறையாக இந்தியாவில் நடைபெறும் இந்த மாநாட்டில் பாதுகாப்பு வல்லுநர்கள், கொள்கை வகிப்பவர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் பங்கேற்றுள்ள இந்த மாநாட்டில் ரயில்வே பாதுகாப்பு தொடர்பான சிறந்த நடைமுறைகள் மற்றும் புதுமையான தீர்வுகள் தொடர்பாக விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.

காலை நடைபெற்ற அமர்வில் வடஅமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள், ஐரோப்பிய நாடுகள் மற்றும் இந்தியாவில் பின்பற்றப்படும் சிறந்த ரயில்வே பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக விவாதங்கள் நடைபெற்றன. ரயில் நிலையங்கள் பயணிகள் வந்து செல்வதற்கான இடம் மட்டுமே இல்லை என்பதையும், அது சமூக பொருளாதார நடவடிக்கைகளுக்கான ஒரு மையம் என்பதையும் உணர்த்தும் வகையில் கலந்துரையாடல்கள் நடைபெற்றன.

இவற்றில் இந்தியா சார்பில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ரயில்வே காவல்துறை தலைமை இயக்குநர் திரு.பிரதன்யா சரவடே, போலந்து சார்பில் திருமதி.மக்டலேனா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிரான்ஸ், பெல்ஜியம், செனகல், சவுதி அரேபியா, கனடா உள்ளிட்ட நாடுகளில் பிரதிநிதிகளும் பல்வேறு அமர்வுகளில் பங்கேற்றனர்.

தொலைநோக்குப் பார்வை 2030 என்ற கருப்பொருளில் பிற்பகல் நடைபெற்ற அமர்வில் இந்தியாவைச் சேர்ந்த மூத்த காவல்துறை அதிகாரிகள் பங்கேற்று எதிர்கால சவால்கள் குறித்து விவாதித்தனர். இணையதளப் பாதுகாப்பு, அதிவேக ரயில்களில் பாதுகாப்பு, குற்றவியல் நடவடிக்கைகள் மற்றும் தீவிரவாதத் தடுப்பு உள்ளிட்டவற்றில் சர்வதேச ஒத்துழைப்பு தேவை என்பதை மாநாட்டில் பங்கேற்ற பிரதிநிதிகள் ஒப்புக் கொண்டனர்.

சர்வதேச ரயில்வே கூட்டமைப்பு என்பது 1922ம் ஆண்டு பாரிஸை தலைமையிடமாகக் கொண்டு நிறுவப்பட்டது. ரயில்வே துறையில் ஆராய்ச்சி மேம்பாடு உள்ளிட்டவைத் தொடர்பாக உலகளாவிய ஒத்துழைப்புக்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.

எம்.பிரபாகரன்

Leave a Reply