சங்கீத நாடக அகாடமியின் உயர் கவுரவமான ஃபெல்லோஷிப் (அகாடமி ரத்னா) மற்றும் அகாடமி புரஸ்கார் விருதுகளை புதுதில்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு வழங்கினார். 2019, 2020, 2021 ஆகிய ஆண்டுகளுக்கான விருதுகள் இன்று வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், நாகரீகம் ஒரு நாட்டின் சாதனைகளை எடுத்துரைப்பதாகவும், பாரம்பரியத்தின் மூலமாக நாட்டின் கலாச்சாரத்தை உணர முடியும் என்றும் அவர் தெரிவித்தார். தனித்துவமான நிகழ்த்துக் கலைகள், நமது நாட்டின் கலாச்சாரங்களை பல நூற்றாண்டுகளுக்கு உயிர்ப்புடன் வைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். நமது கலைகளும், கலைஞர்களும், வளமான பாரம்பரியத்தை சுமந்து பயணிப்பதாக அவர் தெரிவித்தார். வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நமது கலாச்சார பாரம்பரியத்தின் மிகப் பெரிய அம்சம் என்று அவர் கூறினார்.
நமது பாரம்பரியத்தின் கலை என்பது ஒரு ஆன்மீக நடைமுறையாக திகழ்கிறது என்றும் உண்மையை உணர்வதற்கான ஊடகமாகவும் அது திகழ்கிறது என்றும் அவர் தெரிவித்தார். அத்துடன் பிரார்த்தனை, இறைவழிபாடு, பொதுநலன் ஆகியவற்றுக்கான ஊடகமாகவும் கலைகள் திகழ்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். நடனம் மற்றும் இசையின் மூலமாகவும் ஒற்றுமை மற்றும் உற்சாகத்தை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார். மொழியியல் பன்முகத்தன்மையையும் பல்வேறு பகுதிகளின் பண்பாட்டு குணாதிசயங்களையும், கலை ஒரே இழையில் இணைப்பதாக குடியரசுத்தலைவர் தெரிவித்தார்.
நமது நாடு மிகப் பழமையான பாரம்பரியம் மற்றும் கலைகளைக் கொண்டிருப்பதை நினைத்து நாம் பெருமையடைய வேண்டும் என்றும் அவர் கூறினார். நமது கலாச்சார மதிப்பீடுகள் நவீன காலத்திற்கும் மிகப் பயனுள்ளதாக அமைந்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார். பதற்றமும், பிரச்சினைகளும் நிறைந்த இன்றைய காலகட்டத்தில், இந்திய கலைகள் அமைதியையும், நல்லிணக்கத்தையும் பரப்பும் தன்மை கொண்டவை என்று அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் நெகிழ்ச்சித் தன்மைக்கு நமது கலைகள் மிகச் சிறந்த உதாரணமாக விளங்குகின்றன என்று அவர் கூறினார்.
இயற்கையின் கொடைகளான காற்று மற்றும் நீர் மனிதனால் வகுக்கப்பட்ட எல்லைகளுக்கு அப்பாற்பட்டவை என்று கூறிய அவர், அதே போன்று கலைவடிவங்களும் மொழி மற்றும் புவியியல் எல்லைகளுக்கு அப்பாற்பட்டவை என்றார். எம் எஸ் சுப்புலட்சுமி, பண்டிட் ரவிசங்கர், உஸ்தாத் பிஸ்மில்லாகான், லதா மங்கேஷ்கர், பண்டிட் பீம்சென் ஜோஷி, பூபென் ஹசாரிகா போன்ற இசை மேதைகள் மொழி மற்றும் புவியியல் எல்லைகளைத் தாண்டியவர்கள் என்று அவர் கூறினார். அழியாத இசைத்திறனால், இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள இசை ஆர்வலர்களுக்கு மிகச் சிறந்த இசைப் பாரம்பரியத்தை அவர்கள் விட்டுச் சென்றுள்ளதாக திருமதி திரௌபதி முர்மு தெரிவித்தார்.
எம்.பிரபாகரன்