ஜி20 கலாச்சார பணிக்குழுக் கூட்டத்தின் முதலாவது அமர்வு மத்தியப் பிரதேச மாநிலம் கஜுராஹோவில் இன்று நடைபெற்றது.

ஜி-20 நாடுகளின் கலாசாரப் பணிக்குழுக் கூட்டத்தின் முதலாவது அமர்வு மத்தியப் பிரதேச மாநிலம் கஜுராஹோவில் உள்ள மகாராஜா சத்ரசால் மாநாட்டு மையத்தில் இன்று நடைபெற்றது.

இதில் பங்கேற்றுப் பேசிய மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் திரு வீரேந்திர குமார், நீடித்த மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான வழிகளை உருவாக்கி நாடுகளுக்கிடையே பிணைப்பை வலுப்படுத்துவதில் கலாச்சாரம் முக்கியப் பங்காற்றுவதாகக் குறிப்பிட்டார். ஜி-20 செயல்திட்டத்தில்  கலாச்சாரத்தை இணைத்தது முக்கிய சாதனை என்று கூறிய அவர், பொருளாதார வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை ஊக்குவிப்பதில் கலாச்சாரம் முக்கியப் பங்காற்றுகிறது என்றார்.

சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை தொடர்பான இயக்கத்தை  அடிப்படையாகக் கொண்டு இந்தியாவில் ஜி-20 கலாச்சார நடைமுறைகள் கட்டமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.  இந்தியாவின் கலாச்சார பாரம்பரியம், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற நடைமுறைகளுடன் ஆழமாக வேரூன்றியுள்ளது என்று அவர் தெரிவித்தார். வசுதைவ குடும்பகம் – ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற கருப்பொருள் உலகில் அனைவருக்கும் சமமான வளர்ச்சி என்ற சக்திவாய்ந்த கருத்தை எடுத்துரைப்பதாக அவர் தெரிவித்தார்.

கூட்டத்தில் பேசிய கலாச்சாரத்துறை இணை அமைச்சர் திருமதி மீனாட்சி லேகி, கலாச்சாரம், அனைவரையும் இணைப்பதாகத் தெரிவித்தார். தற்போது பாலின சமத்துவம், மகளிருக்கான உரிமைகள் உள்ளிட்டவை குறித்து பரவலாகப் பேசப்படுவதாக அவர் கூறினார். ஆனால், 1,000 ஆண்டுகளுக்கு முன்பே நமது நாட்டில் மகளிருக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டு சமத்துவத்துடன்  நடத்தப்பட்டதாக அவர் கூறினார். பெண்களை சக்தியாகவும், கடவுளாகவும் வழிபட்டு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  இந்திய கலாச்சாரம், மகளிருக்கான சமஉரிமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நீடித்த வளர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது என்று திருமதி மீனாட்சி லேகி கூறினார்.

இன்றைய அமர்வில் கலாச்சாரத்துறைச் செயலாளர் திரு கோவிந்த் மோகனும் பங்கேற்று உரையாற்றினார். பிப்ரவரி 22-ம் தேதி தொடங்கிய கலாச்சாரப் பணிக்குழுக் கூட்டம், 25-ம் தேதி  வரை நடைபெற உள்ளது. இதில் ஜி-20 உறுப்பு நாடுகள், சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கலாச்சார அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply