கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பது தொடர்பான இலக்குகளை அடைவதுடன் கப்பல் துறையை பசுமையாக்குவதற்கான செயல்திட்டங்களை மேம்படுத்துவது முக்கியமானது: மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால்.

நாட்டில் கப்பல் துறையை பசுமையாக்குவதற்கும் மாசுபாட்டின் அளவைக் குறைக்கவும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் பயன்பாட்டை மேம்படுத்துவதற்கும் செயல்திட்டங்களை வகுப்பது மிக முக்கியமானது என மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.சர்பானந்த சோனோவால் கூறியுள்ளார். புதுதில்லியில் நடைபெறும் நீடித்த வளர்ச்சிக்கான உலக உச்சி மாநாடு 2023ல் பசுமை வளர்ச்சி தொடர்பான அமர்வில் பேசிய அவர் பசுமை வளர்ச்சிக்கு மத்திய பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். கார்பன் வெளியேற்றத்தை குறைப்பதற்கான 2030ம் ஆண்டுக்கான இலக்குகளை அடைவது, மற்றும் 2070ம் ஆண்டுக்குள் முற்றிலுமாக கார்பன் வெளியேற்றத்தை தடுப்பதற்கான இலக்குகளை அடைவது ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார். கப்பல் போக்குவரத்தை ஊக்குவிப்பதன் முக்கியத்துவம் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளதாகக் கூறிய அவர், இருதிறன் வாய்ந்த மற்றும் குறைந்த செலவிலான போக்குவரத்து என்று கூறினார்.

ஜி20 தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள இந்தியா தூய்மையான எரிசக்தி மற்றும் பசுமை எரிசக்திக்கு மாறுவது தொடர்பாக பல்வேறு நிலைகளில் பணியாற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார். பசுமை வளர்ச்சியை ஏற்படுத்த அதற்கேற்ற தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார். பசுமை எரிசக்திக்கு மாறும் கொள்கைகளை அதிகளவில் செயல்பாட்டுக்கு கொண்டுவருவதுடன் எரிசக்தி தொடர்பாக சரியான மதிப்பீடுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார்.

தற்போது கப்பல் துறைக்கான எரிசக்தி தேவை 99 சதவீதம் புதைப்படிம எரிப்பொருட்களிலிருந்து பெறப்படுவதாக அவர் கூறினார். 2030ம் ஆண்டுக்குள் இதை 30 சதவீதம் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

கடல் சார்ந்த நிலையான நீலப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் பசுமைக் கப்பல் துறை முக்கியப் பங்காற்றும் என்று அவர் தெரிவித்தார். பல்வேறு முன்முயற்சிகள் மூலம் 2030 மற்றும் 2070ம் ஆண்டிற்கான கார்பன் வெளியேற்றத் தடுப்பு இலக்குகளை எட்ட கப்பல் துறை அமைச்சகம் தீவிரமாக செயலாற்றி வருகிறது என்று திரு. சர்பானந்த சோனோவால் தெரிவித்தார்.  

எம்.பிரபாகரன்

Leave a Reply