ஒருங்கிணைந்த கயானா குடியரசின் துணைக் குடியரசுத் தலைவர் மேன்மை பொருந்திய டாக்டர் பரத் ஜக்டோ இந்தியக் குடியரசுத் தலைவர் திருமதி.திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (24.02.2023) சந்தித்தார்.
குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வருகை தந்துள்ள டாக்டர் ஜக்டோவை வரவேற்ற இந்தியக் குடியரசுத் தலைவர், “கயானாவுடனான இந்திய உறவு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கடந்த 180 ஆண்டுகளாக இந்திய சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு தாய்வீடாக கயானா அமைந்துள்ளது. இந்தியாவும், கயானாவும் புவியியல் அடிப்படையில் மிக அதிக தூரத்தில் பிரிக்கப்பட்டிருந்தாலும் கடந்த கால காலனி ஆதிக்கம், வேளாண் மற்றும் ஊரகத் தொழில் தொடர்புடைய பொருளாதாரங்கள் மற்றும் பல்முனை கலாச்சார சமூக கட்டமைப்பில் ஒரே புள்ளியில் ஒருங்கிணைந்துள்ளது” என்றார்.
இந்தியா மற்றும் கயானா இடையேயான வர்த்தக நடவடிக்கைகள் சீராக உயர்ந்து வருகிறது. கடந்த 2021-22-ல் கொரோனா பெருந்தொற்று காலகட்டத்திலும் இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தில் 300 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சிப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது என்று குடியரசுத் தலைவர் கூறினார். இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தை மேலும் பரவலாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை திருமதி.முர்மு சுட்டிக்காட்டினார்.
இந்தியா-கயானா உறவுகளில் முக்கியத்துவம் பெற்ற மேம்பாட்டில் இரு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தமே மிகப் பெரிய ஆதாரமாக உள்ளது. இந்திய தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரக் கூட்டமைப்பின் திட்டத்தில் 640-க்கும் மேற்பட்ட கயானா அரசு அதிகாரிகள் பயிற்சி பெற்றது மகிழ்ச்சிகரமான செய்தியாகும். தற்போதைய கயானாவின் துணைக் குடியரசுத் தலைவரின் இந்தியப் பயணம் இரு நாடுகளுக்கு இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க நட்புறவை மேலும் வலுப்படுத்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
எஸ்.சதிஸ் சர்மா