மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் டாக்டர். மன்சுக் மாண்டவியா, “மருந்துகள்: தர ஒழுங்குமுறைகள் மற்றும் அமலாக்கம்” என்ற தலைப்பில் இரண்டு நாள் சிந்தனை அமர்வை இன்று தொடங்கி வைத்தார். அவருடன் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார், ரசாயனம் மற்றும் உரங்கள் துறை இணையமைச்சர் திரு பகவந்த் குபா, நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே.பால், லோக்ஆயுக்தா மகாராஷ்டிரா துணைத்தலைவர் திரு சஞ்சய் பாட்டியா ஆகியோர் கலந்து கொண்டனர். பல்வேறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த சுகாதாரச் செயலர்கள் மற்றும் மருந்து கட்டுப்பாட்டாளர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
டாக்டர். மன்சுக் மாண்டவியா தமது தொடக்க உரையில், கலந்துரையாடல் மன்றத்தின் கருப்பொருளை சுட்டிக்காட்டினார். மருந்து மற்றும் சுகாதாரத் துறைகளில் உள்ள அனைத்து பங்குதாரர்களுக்கும் வலுவான மற்றும் நெகிழ்வான ஒழுங்குமுறை அமைப்புகளை உருவாக்குவதற்கான ஒருங்கிணைந்த அணுகுமுறைகளுக்கான பாதைகளை ஆலோசிப்பதற்கான ஒரு தளமாகும் இந்த சிந்தனை அமர்வு என்று அவர் கூறினார். “உலகின் மருந்தகம்” என்ற இந்தியாவின் புகழ் நிலைநிறுத்தப்படுவதையும், நுகர்வோருக்கு மிக உயர்ந்த தரத்தில் மருந்துப் பொருட்களை வழங்குவதையும் இது உறுதி செய்யும் என்றார் அவர்.
“நாட்டின் ஒழுங்குமுறை வழிமுறைகள் காலத்திலும் இடத்திலும் நிலைத்திருக்கும் குறைபாடற்ற தரத்தில் இருப்பதை உறுதி செய்வது மிகவும் முக்கியமானது. மத்திய அமைச்சகங்களும் மாநில அமைப்புகளும் கூட்டுறவு கூட்டாட்சியின் உணர்வோடு செயல்படும்போது, ஒன்றுக்கொன்று பலத்தை உருவாக்கி, ஒழுங்குமுறை அமைப்புகளில் உள்ள சிக்கல்களை அகற்ற கூட்டாகச் செயல்படும்போது இது சாத்தியமாகும்”என்று மத்திய அமைச்சர் கூறினார். “நாம் எதிர்கொள்ளும் சவால்களை நமது கூட்டு அனுபவத்தை ஒருங்கிணைப்பதன் மூலம் சமாளிக்க முடியும். வலுவான, உறுதியான, மீள்தன்மை மற்றும் மக்கள் நட்பு வழிமுறைகளை உருவாக்க வளமான அறிவை இந்த அமர்வு வழங்கும்”என்று அவர் கூறினார்.
எம்.பிரபாகரன்