தமிழக அரசு, மனநல மீளாய்வு மன்றங்களின் உறுப்பினர்களுக்கு பயணப்படியை நியாயமாக வழங்க வேண்டும்!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

தமிழகத்தில் விவசாயத் தொழிலைப் பாதுகாக்க, விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற, விவசாயக் கூலித்தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் உயர தமிழக அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அதாவது விவசாயத் தொழில் சம்பந்தமாக அவ்வப்போது எழுகின்ற பிரச்சனைகளை சரிசெய்ய வேண்டும்.

மேலும் உரத்தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கவும், இடுபொருட்கள் வாங்கினால் தான் உரம் கொடுக்கப்படும் என்ற நிலை ஏற்படாமல் இருக்கவும் நடவடிக்கை தேவை.

100 ஆண்டுகால கனவுத் திட்டமான காவிரி – வைகை – குண்டாறு இணைப்புத் திட்டம் இன்னும் முடிக்கப்படாமல் இருப்பதால், புதுக்கோட்டை, கரூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி ஆகிய 7 மாவட்டங்களின் விவசாயத்துக்கான, பொது மக்களுக்கான தண்ணீர் பிரச்சனை நீடிக்கிறது. எனவே இத்திட்டத்தை விரைந்து முடிக்க விரைவுப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

வறட்சியான மாவட்டங்களில் கருகிய பயிர்களுக்கு இழப்பீட்டை காலத்தே வழங்காத காரணத்தால் விவசாயிகள் தொடர்ந்து விவசாயம் செய்வதற்கு பொருளாதாரம் இல்லாமல் சிரமப்படுகிறார்கள். எனவே தமிழக அரசு, விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும்.

அரசு நெல்கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல்மணிகளின் ஈரப்பதம் 20 சதவீதம் வரை இருந்தால் கொள்முதல் செய்யலாம் என்று அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், கொள்முதல் செய்யும் போது வேறு எந்த தொகையையும் தேவையில்லாமல் பிடித்தம் செய்யக்கூடாது.

மத்திய மாநில அரசால் தமிழகத்தில் அமைக்கப்பட்ட மனநல மன்றங்களின் மூலம் மனநலம் பாதிக்கப்பட்டோரை பரமாரிக்கும் பணியில் ஈடுபடும் உறுப்பினர்களுக்கும் மற்றும் அரசு சாரா நிறுவன உறுப்பினர்களுக்கும் அரசின் கிரேடு 3 ல் பணிபுரியும் அலுவலர்களுக்கு வழங்கப்படும் பயணப்படியை வழங்க வேண்டும். அதாவது அரசு ஆணையில் பயணப்படியாக கிலோ மீட்டருக்கு ரூ.6 வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் அதன்படி வழங்கப்படுகிறதா. இதற்காக மத்திய அரசு ஒதுக்கும் நிதி முறையாக செலவு செய்யப்படுகிறதா. தமிழகத்தில் அமைக்கப்பட்ட 13 மனநல மன்றங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதெல்லாம் கேள்விக்குறியே. இதனையெல்லாம் சரி செய்ய வேண்டியது தமிழக அரசின் கடமை.

எனவே தமிழக அரசு, மனநல மீளாய்வு மன்றங்களின் செயல்பாடுகளை கண்காணித்து, உறுப்பினர்களுக்கு பயணப்படியை நியாயமாக வழங்கவும், விவசாயத் தொழிலைப் பாதுகாக்கவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எஸ்.திவ்யா

Leave a Reply