மத்திய நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொது மக்கள் குறைதீர்வுத் துறை, மத்தியப் பிரதேச அரசுடன் இணைந்து “நல்லாட்சி நடைமுறைகள்” என்ற தலைப்பில் இரண்டு நாள் மண்டல மாநாட்டை நாளை முதல் போபாலில் நடத்துகிறது. இந்நிகழ்ச்சியில் இந்தியா முழுவதிலிமிருந்து சுமார் 200 பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள்.
மத்திய நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்வுத் துறை இணையமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங், மத்தியப் பிரதேச அறிவியல் & தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு ஓம் பிரகாஷ் சக்லேச்சா ஆகியோர் இந்த 2 நாள் மாநாட்டைத் தொடங்கி வைக்கின்றனர். மத்திய நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்வுத் துறை செயலாளர் திரு வி. ஸ்ரீனிவாஸ் தொடக்க அமர்வில் உரையாற்றுகிறார். தொடக்க அமர்வில் மத்தியப் பிரதேச அரசின் தலைமைச் செயலாளர் திரு இக்பால் சிங் பெயின்ஸும் கலந்து கொள்கிறார்.
இந்த மாநாடு மத்திய, மாநில மற்றும் மாவட்ட அளவில் பல்வேறு நிர்வாகச் சீர்திருத்தங்கள் மூலம் அரசையும், குடிமக்களையும் நெருக்கமாகக் கொண்டுவரும் முயற்சியாகும். “அதிகபட்ச ஆட்சி, குறைந்தபட்ச அரசு” என்ற கொள்கை நோக்கத்துடன் அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள் மற்றும் புதுமைகளைப் பின்பற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
எஸ்.சதிஸ் சர்மா