5-வது மக்கள் மருந்தக தின நிகழ்வில் பெங்களூரு தெற்குப் பகுதியில் கட்டணமில்லா ரத்த சுத்திகரிப்பு (டயாலிசிஸ்) மையம், 100-வது மக்கள் மருந்தக மையம், ஆகியவற்றை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா இன்று (07.03.2023) தொடங்கிவைத்தார். கர்நாடக முதலமைச்சர் திரு பசவராஜ் பொம்மை நிகழ்வுக்கு முன்னிலை வகித்தார். நமோ குழந்தைகள் காப்பகம், நமோ நடமாடும் சுகாதார கவனிப்பு ஊர்திகள் ஆகியவற்றையும் அவர் தொடங்கிவைத்தார்.
இந்த நிகழ்வில் திரண்டிருந்தோரிடையே உரையாற்றிய டாக்டர் மன்சுக் மாண்டவியா, அனைத்து குடிமக்களுக்கும் குறைந்த விலையில் சிறந்த தரத்தில் மருந்துகள் கிடைக்கச் செய்வது அரசின் முன்னுரிமையாக உள்ளது என்றார். இதனை மனதில் கொண்டு நாடு முழுவதும் மக்கள் மருந்தக மையங்கள் திறக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.
2023 ஜனவரி 31 நிலவரப்படி, இத்தகைய மையங்களின் எண்ணிக்கை 9082 ஆக உள்ளன. இவற்றை 2023 டிசம்பர் இறுதிக்குள் 10,000 ஆக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். மக்கள் மருந்தக மையங்களின் பயன்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இளைஞர்கள் மக்கள் மருந்தக நண்பர்களாக மாற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இத்தகைய மையத்தை திறப்பது மிகவும் எளிது என்று குறிப்பிட்ட அமைச்சர், மக்கள் மருந்தக மையத்தை திறப்போருக்கு 20 சதவீத கமிஷன் வழங்கப்படும் என்றார்.
திவாஹர்