இந்திய கடற்படையின் பிரம்மாண்டமான கூட்டுப் போர் பயிற்சி ட்ரோபெக்ஸ் 23 நிறைவு!

இந்திய கடற்படையின் 2023-ஆம் ஆண்டுக்கான பிரம்மாண்டமான கூட்டுப்போர் பயிற்சியான ட்ரோபெக்ஸ் 23, இந்திய பெருங்கடல் பகுதியில் கடந்த நவம்பர் 2022 தொடங்கி நான்கு மாதங்களுக்குப் பிறகு இந்த வாரம் அரபிக் கடலில் நிறைவடைந்தது. கடலோர பாதுகாப்புப் பயிற்சி, கடல் மற்றும் நிலத்தில் மேற்கொள்ளப்படும் பயிற்சி உள்ளிட்டவை இதில் அடங்கியிருந்தன. இந்திய ராணுவம், இந்திய விமானப்படை மற்றும் கடலோர காவல் படை உள்ளிட்டவையும் இணைந்து இந்தப் பயிற்சியில் பங்கேற்றன.

அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடாவை உள்ளடக்கிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிகழ்ந்த இந்தப் பயிற்சி, சுமார் 21 மில்லியன் சதுர கடல் மைல் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டது. ஏறத்தாழ இந்திய கடற்படையின் 70 போர்க்கப்பல்கள், 6 நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் 75 விமானங்கள் ட்ரோபெக்ஸ் 23 பயிற்சியில் பங்கேற்றன.

கூட்டுப் பயிற்சியின் இறுதிக் கட்டத்தின் போது, மார்ச் 6-ஆம் தேதி உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐ.என்.எஸ் விக்ராந்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஒரு நாளை செலவிட்டார். இந்திய கடற்படையின் தாக்குதல் ஆயத்தநிலை மற்றும் தளவாட தயார்நிலை குறித்து அவர் ஆய்வு செய்ததுடன், வீரர்களிடையே உரையாற்றுகையில் இந்திய கடற்படையின் தாக்குதல் ஆயத்தநிலையை பாராட்டியதோடு, நமது எதிரிகளின் போர் முயற்சிகள் இனி நீடித்து நிலைக்க முடியாத அளவிற்கு அவர்களின் பொருளாதார ஆதாரங்கள் மற்றும் ராணுவ திறன்களை தகர்க்க கடற்படை உறுதி செய்ய வேண்டும் என்று நாடு எதிர்பார்ப்பதாகக் கூறினார். கடல்சார் துறையில் இந்தியாவின் தேசிய நலன்களைப் பாதுகாப்பதில் இந்திய கடற்படை முழு திறனைப் பெற்றுள்ளது என்றும், இந்தியாவின் அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எதிரிகளின் தீய திட்டங்களை முறியடிக்கும் என்றும் தாம் பரிபூரணமாக நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply