நான்காவது Y20 கலந்தாய்வு கூட்டம், இந்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்துடன் இணைந்து புனேவில் உள்ள சிம்பியோசிஸ் சர்வதேச பல்கலைக்கழகத்தில் (SIU) இன்று நடைபெற்றது. மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு மற்றும் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தொடக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய இளைஞர் விவகாரங்கள், விளையாட்டு, தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், உற்பத்தித் தொழிலுக்கு பெயர் பெற்ற புனே நகரத்தில் நான் இன்று இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் எனத் தெரிவித்தார். 10-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களுடன், இந்நகரம் பல தலைமுறைகளாக அறிவு மற்றும் கலாச்சாரத்தின் கலங்கரை விளக்கமாக இருந்து வருவதாகவும், உலகம் முழுவதிலும் இருந்து வரும் மாணவர்கள் மற்றும் அறிஞர்களை ஈர்ப்பதாகவும் அவர் கூறினார்.
“சமாதானத்தை கட்டியெழுப்புதல் மற்றும் நல்லிணக்கம்: யுத்தம் இல்லாத யுகத்தை நோக்கி பயணித்தல் என்ற கருப்பொருளில் பேசிய அமைச்சர் அனுராக் தாக்கூர், இரு நாடுகளுக்கிடையே நடந்து வரும் மோதல், தொற்றுநோய்களின் நீண்டகால தாக்கம் அல்லது தொடர்ச்சியான பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரமின்மை என எதுவாக இருந்தாலும், இந்த பிரச்சினைகள் பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்புவதோடு ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைக்கான அவசரத் தேவையை எடுத்துக்காட்டுவதாகவும் அமைச்சர் அனுராக் தாக்கூர் குறிப்பிட்டார்.
உரையின் இறுதியாக சுவாமி விவேகானந்தரின் கனவின்படி, 21-ம் நூற்றாண்டு நமக்கானது என்பதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர் அனுராக் தாக்கூர் குறிப்பிட்டார். அமிர்த காலத்தில் இருந்து தங்கக் காலத்திற்குச் செல்லும் பயணத்தில் இளைஞர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து மூலோபாய தொலைநோக்கு குழுவின் தலைவர் டாக்டர் சுந்தீப் வாஸ்லேகர், சிம்பியோசிஸ் நிறுவனர் மற்றும் தலைவர் பேராசிரியர் (டாக்டர்) எஸ்.பி.முஜும்தார் ஆகியோர் நிகழ்ச்சியில் உரையாற்றினர்.
எஸ்.சதிஸ் சர்மா