திருவனந்தபுரத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு: குடும்பஸ்ரீ-யின் வெள்ளிவிழாக் கொண்டாட்டங்களைத் தொடங்கி வைத்ததுடன் உன்னதி திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

திருவனந்தபுரத்தில் தமக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (மார்ச்-17, 2023) பங்கேற்றார். மகளிர் சுயஉதவிக் குழுக்களின் மிகப்பெரிய கட்டமைப்புகளில் ஒன்றான குடும்பஸ்ரீ என்ற அமைப்பின்  வெள்ளிவிழாக் கொண்டாட்டங்களை அவர்  தொடங்கி வைத்தார். எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் சுயவேலைவாய்ப்பை வழங்கும் உன்னதி திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார். மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் பட்டயப்படிப்புகளுக்கான பாடப்புத்தகங்களையும் அவர் வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர் கேரளாவில் பசுமையான காடுகள், அழகான கடற்கரைகள், உயரமான மலைகள், நதிகள், ஏரிகள், உயரமான தென்னை மரங்கள் போன்றவற்றுடன் வளமான உயிரி பன்முகத்தன்மையைக் கொண்டுள்ளதாகக் கூறினார். இது கேரளாவை கடவுளின் நிலம் என்று கூறும் அளவுக்கு மாற்றியுள்ளது என்று அவர் தெரிவித்தார். இதனால் கேரளா, அனைவரையும் கவரும் சுற்றுலா மையமாக திகழ்கிறது என்று அவர் குறிப்பிட்டார். இயற்கை மருத்துவமுறைகள் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்திற்கான மையமாகவும் கேரளா உள்ளது என்று குடியரசுத் தலைவர் கூறினார். தங்களது நேர்மை,திறமை மற்றும் தொழில்முனைவு திறன்கள் காரணமாக உலகெங்கிலும் கேரள மக்கள் நல்ல மதிப்பைப் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார். மலையாள மக்கள் இந்தியாவின் பெருமையை பரப்புவதாகவும் அவர் பாராட்டு தெரிவித்தார்.

கேரள மக்களின் பரந்த சிந்தனை அனைவரும் பின்பற்றக்கூடியது என்றும் அவர் கூறினார். பலதரப்பட்ட கலாச்சாரங்களை கொண்ட மக்கள் கேரளாவில் வாழ்வதாகத் தெரிவித்த அவர், அனைத்து நம்பிக்கைகள் மற்றும் மதங்களை பின்பற்றுவோரும் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருவதாகக் கூறினார்.

கேரள மாநிலத்தில் ஆண், பெண் விகிதம் நாட்டிற்கே முன்னுதாரணமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். எழுத்தறிவு, மற்றும் மகளிர் எழுத்தறிவு சதவீதத்திலும் கேரளா முன்னிலையில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். தாய்-சேய் நலன் மற்றும் சிசு மரணத்தடுப்பு ஆகியவற்றிலும் கேரளாவின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது என்றும் அவர் பாராட்டு தெரிவித்தார். சமூகத்தில் மகளிரின் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் போது, ஒட்டுமொத்த சமுதாயமும் சிறப்படையும் என்று அவர் கூறினார். பெண்கல்வி மற்றும் மகளிர் அதிகாரம் பெறுதலில் கேரளா சிறந்து விளங்கும் நிலையில், ஒட்டுமொத்த வளர்ச்சி செயல்பாடுகளிலும் இது பிரதிபலிப்பை ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.

அமிர்த காலத்தில் வளர்ச்சியடைந்த நாடாக இந்தியாவை உருவாக்குவதில் கேரள மாநிலத்தின் இளைஞர் மிகப்பெரிய பங்களிப்பை வழங்குவார்கள் என்று குடியரசுத் தலைவர்  திருமதி திரௌபதி முர்மு நம்பிக்கை தெரிவித்தார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply