தமிழகத்தில் கஞ்சா விற்பனைக்கும், பதுக்கலுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்.
காரணம் கஞ்சா விற்கப்படுவதால் அதனை வாங்கி பயன்படுத்தும் இளைஞர்கள், மாணவர்கள், முதியோர் போன்ற பல்வேறு தரப்பினரின் வாழ்க்கை சீரழிகிறது. தமிழ்நாட்டில் கஞ்சா இல்லாத நிலை ஏற்பட வேண்டும் என்பது தான் தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
தமிழகத்தில் கஞ்சா விற்கப்படுவது குறித்த செய்திகளும், கஞ்சாவினால் பாதிக்கப்படும் இளைய சமுதாயம் பற்றிய செய்திகளும் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் வெளிவந்து கொண்டு தான் இருக்கிறது. இதனை பார்க்கும் போது தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் எப்படி விற்பனைக்கு வருகிறது என பொது மக்கள் கவலை அடைந்துள்ளனர்.
குறிப்பாக நேற்று முன் தினம் கூட மதுரை மாவட்டத்தில் 72 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதும், கஞ்சா தொழிலுக்கு விலை உயர்ந்த கார், பைக் பயன்படுத்தப்பட்டதும் தெரியவருகிறது.
இப்படி கஞ்சா தொழில் நடைபெறுவதும், கஞ்சா பறிமுதல் செய்யப்படுவதும், கடத்தல்காரர்கள் மீது வழக்கு பதிவு செய்வதும், ஜாமீன் கிடைப்பதும், நீதிமன்றத்தில் வழக்கு சம்பந்தமான விசாரணை நடைபெறுவதும் தொடர்கின்றது.
இந்நிலையில் கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் முழுமையாக கிடைக்காத நிலை தமிழகத்தில் ஏற்பட்டால் தான் தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழக அரசுக்கும் நல்லது,
எனவே காவல்துறை கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களைக் கண்டுபிடிக்க தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
தடை செய்யப்பட்டுள்ள கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் தமிழகத்திற்கு எப்படி வருகிறது, இங்கே எங்கு பதுக்கப்படுகிறது, தமிழகத்திலிருந்து வேறு எங்கே கடத்தப்படுகிறது என்பதை முதலில் கண்டறிய தமிழக அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் தமிழக அரசு, மாநிலத்தில் உள்ள மாணவர்கள், இளைஞர்கள், முதியோர் போன்ற பல்வேறு தரப்பினரின் உடல்நலன், வருங்கால நல்வாழ்வு ஆகியவற்றை மிக முக்கிய கவனத்தில் கொண்டு கஞ்சாவுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சி.கார்த்திகேயன்