பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு புது தில்லியில் இன்று நடைபெற்ற உலகளாவிய சிறுதானியங்கள் (ஸ்ரீ அன்னா) மாநாட்டின் தொடக்க அமர்வில் மத்திய வேளாண்துறை அமைச்சர் உரையாற்றினார்.
சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு – 2023, உலகளாவிய உற்பத்தியை அதிகரிக்கவும், திறமையான பதனம் மற்றும் பயிர் சுழற்சியை சிறந்த முறையில் பயன்படுத்தவும், உணவு உற்பத்திப் பகுதிகளில் முக்கிய அங்கமாக சிறுதானியங்களை ஊக்குவிக்கவும் வாய்ப்பளிக்கும் என்று திரு நரேந்திர சிங் தோமர் தமது உரையில் குறிப்பிட்டார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் முன்முயற்சியால், ஐக்கிய நாடுகள் சபை 2023 ஆம் ஆண்டினை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவித்துள்ளது என்று திரு தோமர் கூறினார்.
சிறுதானிய உற்பத்தி மற்றும் நுகர்வை அதிகரிக்க, இதர மத்திய அமைச்சகங்கள், அனைத்து மாநில அரசுகள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் இணைந்து, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
சரிவிகித உணவு மற்றும் பாதுகாப்பான சுற்றுச்சூழலுக்கு பங்களிப்பதால், சைவ உணவுகளுக்கான தேவை அதிகரித்து வரும் காலத்தில் சிறுதானியங்கள் மாற்று உணவு முறையை வழங்குவதாகவும், அவை மனித குலத்திற்கு இயற்கையின் கொடைகள் என்றும் திரு தோமர் கூறினார். ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா சிறுதானியங்களின் முக்கிய உற்பத்தி மற்றும் நுகர்வு மையங்கள், குறிப்பாக இந்தியா, நைஜர், சூடான், நைஜீரியா ஆகியவை சிறுதானியங்கள் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்றும், உலகில் உணவுண்ணும் ஒவ்வொருவர் தட்டிலும் சிறுதானியங்கள் இடம்பெற வேண்டும் என்பதே தமது பெரு விருப்பம் என்றும் அவர் கூறினார்.
ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் பயிரிடப்பட்ட முதல் பயிர்கள் சிறுதானியங்கள்தான். பின்னர் உலகம் முழுவதும் மேம்பட்ட நாகரிகங்களுக்கு ஒரு முக்கிய உணவாதாரமாகப் பரவின.
முன்னதாக, 2023 புத்தாண்டு தொடக்கத்தில் கயானா அதிபர் டாக்டர் முகமது இர்ஃபான் அலியைச் சந்திப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றும், கயானா மக்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்திப்பதாகவும் திரு தோமர் தெரிவித்தார். 2023 ஜனவரி 8-10 தேதிகளில் இந்தூரில் நடைபெற்ற 17வது வெளிநாடுவாழ் இந்தியர் தின மாநாட்டில் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டதற்காக டாக்டர் அலிக்கு நன்றி தெரிவித்த திரு தோமர், மதிப்புமிக்க பிரவாசி பாரதிய சம்மான் விருதைப் பெற்றதற்காக அதிபருக்குத் தமது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
திவாஹர்