இந்தியாவின் நீலப் பொருளாதாரத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பரந்த கடல் வளங்களை ஆராய்வதில் முந்தைய அரசுகள் அக்கறை காட்டவில்லை என்றும், பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு முதல் முறையாக கடல் வளங்களை ஆராய்ந்து அவற்றைப் பயன்படுத்த, தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, இந்தியாவின் நீலப் பொருளாதாரத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாகவும் மத்திய புவி அறிவியல்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். நாட்டுக்கு ஆற்றிய இரண்டு சுதந்திர தின உரைகளில், பிரதமர் மோடி ஆழ்கடல் பணியை குறிப்பிட்டு அதன் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டியதை அவர் நினைவுகூர்ந்தார்.

மத்திய அமைச்சர் திரு ஶ்ரீபத் நாயக் மற்றும் கோவா மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் ரோஹன் கவுண்டே தலைமையிலான உயர்மட்ட கோவா அதிகாரிள் குழுவுடன் டாக்டர் ஜிதேந்திர சிங் உரையாடினார்.

கோவாவின் சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஹன் கவுண்டே மற்றும் அவரது குழுவினர், புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் கோவா மாநில சுற்றுலா மற்றும் கடல் சார்ந்த வளர்ச்சிக்கு உதவும் திட்டங்களை டாக்டர் ஜிதேந்திர சிங்கிடம் முன்வைத்தனர். முன்மொழிவுகளை பரிசீலிப்பதாக மாநில சுற்றுலாத்துறை அமைச்சரிடம் உறுதியளித்த மத்திய அமைச்சர், கடந்த ஆண்டுதான் புவி அறிவியல் அமைச்சகம் மூலம் மத்திய அரசு உலகிலேயே மிகப்பெரிய கடலோர தூய்மைப் பிரச்சாரத்தை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது என்றார். 75 நாட்கள் நீடித்த இந்த தூய்மைப்பிரச்சாரத்தில் 75 கடற்கரைகள் சுத்தம் செய்யப்பட்டதை அவர் குறிப்பிட்டார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், நீலப் பொருளாதாரத்தின் கீழ் மிகப்பெரிய ஆற்றலைக் கொண்ட இந்தியாவின் கடல் வளங்களை ஆய்வு செய்ய மத்திய அரசு முதன்முறையாகத் தொடங்கியுள்ளது என்றும் மத்திய அமைச்சர் மேலும் கூறினார். இந்த கடல் வளங்கள் கடந்த காலங்களில் இதுவரை ஆராயப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் கடல்சார் பொருளாதார நடவடிக்கைகளுக்குள் நிலையான, உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் வாய்ப்புகளை ஊக்குவிப்பதும், கடல் வளங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவற்றை நிலையான முறையில் பயன்படுத்துவதற்கான பொருத்தமான திட்டங்களைத் தொடங்குவதும் நீலப் பொருளாதாரத்தின் நோக்கமாகும் என்று மத்திய அமைச்சர் கூறினார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply