பிரதமர் திரு.நரேந்திர மோடி தொடங்கி வைத்த சர்வதேச சிறுதானிய மாநாட்டையொட்டி, சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் தொழில்நுட்ப அமர்வுகளுடன் கூடிய கருத்தரங்கை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) நடத்தியது. இந்த இரண்டு நாள் சர்வதேச சிறுதானிய மாநாடு புது தில்லி பூசாவில் உள்ள NASC வளாகத்தில் சனிக்கிழமை தொடங்கியது. இந்த மாநாட்டின் தொடக்க அமர்வில், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தால் (FSSAI) தயாரிக்கப்பட்ட சிறுதானியங்களின் தரங்களின் அடிப்படையில் “ஸ்ரீ அன்னா: ஒரு முழுமையான கண்ணோட்டம்” என்ற புத்தகத்தை பிரதமர் திரு.நரேந்திர மோடி டிஜிட்டல் முறையில் வெளியிட்டார்.
உலகின் மிகப் பழமையான இந்தப்பயிர் முறையானது, நிகழ்கால மற்றும் எதிர்கால பயிராக மாறுவதன் மூலம் விவசாய மறுமலர்ச்சியை காண்பதாக FSSAI தலைமை நிர்வாக அதிகாரி ஜி. கமல வர்தன ராவ் குறிப்பிட்டார்.
நித்தி ஆயோக் உறுப்பினர் டாக்டர். வி.கே. பால் கூறுகையில், சிறுதானியங்கள் நுகர்வோர், விவசாயிகள் மற்றும் காலநிலைக்கு நல்லது என்று கூறினார். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ் பூஷன் உரையாற்றியபோது, வரலாற்று ரீதியாக சிறுதானியங்கள் பயிரிடப்பட்டு வரும் நிலையில், அவற்றின் சாகுபடி பரப்பளவு கணிசமாகக் குறைந்துள்ளதாகவும், அதற்கான காரணத்தை கண்டறிந்து அதற்கு தீர்வு காண இதுவே சிறந்த தருணம் எனவும் கூறினார்.
மூன்று அமர்வுகளாக நடைபெற்ற இந்த மாநாட்டில், சிறுதானியங்கள் மற்றும் அவற்றின் நன்மைகள் குறித்தும் பல விளக்கங்களை அரங்கத்தில் அமர்ந்திருந்த மக்கள் நிபுணர்களிடம் கேட்டறிந்தனர். சிறுதானியங்கள் நுகர்வு, அவற்றின் நலன்கள், ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகள், நிலைத்தன்மை, மற்றும் உணவு முறை மாற்றம் குறித்த அரசின் பல்வேறு முன்னெடுப்புகளில் ஊட்டச்சத்து நிபுணர்கள், சுகாதார நிபுணர்கள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறை தலைவர்கள், சர்வதேச பேச்சாளர்களையும் ஈடுபடுத்துவதே இந்த மாநாட்டின் நோக்கமாகும்.
எம்.பிரபாகரன்