ஆயுஷ் துறையில் பங்களிப்பு செய்து 2023-ம் ஆண்டிற்கான பத்ம விருது பெற்றவர்களை ஆயுஷ் அமைச்சகம் செவ்வாய்கிழமை மாலை அன்று பாராட்டியது. ராம் சந்திரா மிஷன், ஐதராபாத், தலைவர் திரு கமலேஷ் பட்டேல் (பத்மபூஷண்), பிரபல ஆயுர்வேத அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மனோரஞ்சன் சாஹூ (பத்ம ஸ்ரீ), பழம்பெரும் சித்தா நிபுணர் டாக்டர் கோபால்சாமி வேலுச்சாமி (பத்மஸ்ரீ) ஆகியோருக்கு ஆயுஷ் முறைகளை பிரபலப்படுத்துவதில் பங்களிப்பு செய்ததற்காக மத்திய ஆயுஷ் அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் கௌரவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய திரு சர்பானந்த சோனோவால் பத்ம விருது பெற்றவர்களை வாழ்த்துவதாக கூறினார். பத்ம விருதாளர்களின் சாதனைகள் நம் அனைவருக்கும் உத்வேகம் அளிப்பதாகவும் தெரிவித்தார். இந்த விருதுகள் சிறந்த திறனுக்கான அடையாளம் என்றும் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பின் மூலம் நம் சமூகத்திற்கு பங்களிப்பு செய்த தனிநபர்களை பாராட்டுவது பெருமை அளிக்கக்கூடியது என்று தெரிவித்தார்.
எம்.பிரபாகரன்