தமிழக சடப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படுவதன் மூலம் விரைவில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கு முழுமையான தடை ஏற்படும் என்று நம்புகிறேன்.
ஆன்லைன் ரம்மி விளையாட்டால் மாணவர்கள், இளைஞர்கள்,முதியோர் என பல தரப்பினரின் வாழ்வானது சீரழிகிறது.குறிப்பாக ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்ட பலர் உயிரை மாய்த்துக்கொண்டதை அறிவோம்.
அதாவது இணைய வழியில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு விளையாடுவதால் பணத்தை இழந்து, மனம் நொந்து, உயிரிழப்புகள் ஏற்பட்டதால் பல குடும்பங்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலை தொடரக்கூடாது என்றால் ஆன்லைன் சூதாட்டத்துக்கு முழுமையான தடை ஏற்பட வேண்டும்.
ஆன்லைன் சூதாட்டங்களை வரம்பிற்குள் கொண்டுவர மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது. அதன் அடிப்படையில் கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
ஆளுநர் அவர்கள் இம்மசோதா சம்பந்தமாக தமிழக அரசுக்கு சில விளக்கங்கள் கேட்டு திருப்பி அனுப்பினார்.இந்நிலையில் இன்று தமிழக சட்டப்பேரவையில் 2 வது முறையாக ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டுள்ளது.
இம்மசோதாவானது ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படுவதன் மூலம் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்து, ஆன்லைன் சூதாட்டத்துக்கு தமிழகத்தில் இனி இடம் கிடையாது என்ற நிலை ஏற்படும் என்று நம்புகிறேன்.
எனவே தமிழக சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை த.மா.கா சார்பில் வரவேற்று, மசோதாவானது ஆளுநரின் ஒப்புதலுக்கு உட்பட்டு, ஆன்லைன் சூதாட்டத்துக்கு முழுமையான தடை ஏற்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக த.மா.கா சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சி.கார்த்திகேயன்