யூகோ வங்கியின் 80-ம் ஆண்டு நிறைவு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு.

கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற (2023 மார்ச்-28) யூகோ வங்கியின் 80-ம் ஆண்டு நிறைவு விழாவில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு பங்கேற்றார். இந்த விழாவில் காணொலிக்காட்சி மூலம் யூகோ வங்கியின் 50 புதிய கிளைகளையும் அவர் திறந்து வைத்தார். இதைபோல், யூகோ வங்கியின் சார்பில் ஒடிசாவின் ராய்ரங்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ அரவிந்தர் ஒருங்கிணைந்த கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் புனரமைப்பு பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.

விழாவில் பேசிய குடியரசுத் தலைவர், கடந்த 1943-ம் ஆண்டு தொடங்கப்பட்ட யூகோ வங்கி அன்று முதல் இன்று வரை வங்கித்துறையில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வருகிறது என்றார். விவசாயம், தொழில், வர்த்தகம், உள்கட்டமைப்பு, சமூக நலன் ஆகிய துறைகளுக்கு தேவையான கடன் மற்றும் நிதி சேவையை வழங்கி நாட்டின் பொருளாதார மேம்பாட்டில் இந்த வங்கி முக்கிய பங்காற்றி வருவதாக பெருமிதம் தெரிவித்தார். அதேபோல் மத்திய அரசின் திட்டங்களுக்கும், முன்னெடுப்புகளுக்கும் ஆதரவு அளிப்பதிலும் இன்றியமையாத பங்காற்றி வருவதாக கூறினார். இந்த வங்கி, தனது சேவையை எதிர்வரும் காலங்களில் சிறப்பாக செய்யும் என நம்பிக்கை தெரிவித்த அவர், புத்தாக்க முயற்சிகளை உருவாக்கவும், மேம்படுத்தவும் உறுதிபூண்டு இருப்பதாக குறிப்பிட்டார்.

யூகோ வங்கி, இரண்டு முக்கிய கடமைகளை கையாள்வதாக பட்டியலிட்ட குடியரசுத் தலைவர், அதில் பொதுமக்கள் பணத்தை பாதுகாப்பதே முதல் கடமை என்றும், இன்றைய பணத்தை சேமிக்க வழி வகுத்து எதிர்காலத்திற்கான சொத்துக்களை உருவாக்குவதே இரண்டாவது கடமை என்றும் குறிப்பிட்டார். இவ்விரு கடமைகளையும் சமமாக நிறைவேற்றுவது என்பது ஒவ்வொரு வங்கிக்கும் சவாலாக இருக்கும் என்று தெரிவித்த அவர், இதனை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட குளறுபடியே உலகின் பல்வேறு பகுதிகளில் பொருளாதாரம் சார்ந்த பிரச்சனைகளுக்கு அடித்தளம் அமைத்திருப்பதாக கூறினார். லட்சக்கணக்கான மக்களின் பணத்தை சேமிக்கும் பணியை செய்யும் வங்கிகள் அவர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்வதாகவும் பெருமிதம் தெரிவித்தார். எனவே, யூகோ வங்கியின் ஊழியர்களும், அதிகாரிகளும் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து சிறப்பாக செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் கூறினார்.

ஃபின்டெக் தொழில்நுட்பம் மக்கள் தங்களது பணத்தை வெளிப்படைத் தன்மையுடன் மேலாண்மை செய்ய உதவுவதாகவும், இந்தியாவைச் சேர்ந்த ஏழை மக்கள், புறநகர்ப் பகுதியைச் சேர்ந்த மக்கள், கிராமப்புற மக்கள் என அனைத்து தரப்பினரும் இந்த தொழில்நுட்பத்தை கையாள்வது மகிழ்ச்சியளிக்கிறது என்றார். வகையில் இருப்பதாக தெரிவித்தார். இத்தகையை தொழில்நுட்பங்களை மக்கள் பயன்படுத்துவது அவர்களை அதிகாரமிக்கவர்களாக மாற்றுவதாக குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கூறினார். மேலும் இத்தகையை வசதிகள் நாட்டு மக்களிடையே சமூக நீதியை நிலை நாட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேபோல், பணப்பரிமாற்றத்திற்கு தற்போது அதிகளவில் பயன்படுத்தப்படும் யூகோ வசதி உலக நாடுகளில் மாபெரும் வெற்றிகண்ட ஃபின்டெக் தொழில்நுட்பம் ஒரு புத்தாக்க நடவடிக்கையாகும் என்று கூறி குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு தமது உரையை நிறைவு செய்தார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply