இந்திய தகவல் பணி மற்றும் இந்திய கடற்படை ஆயுதப் பணிப் பிரிவு அதிகாரிகள் மற்றும் பயிற்சி அதிகாரிகள் குடியரசுத் தலைவரை சந்தித்தனர் .

இந்திய தகவல் பணி (IIS) அதிகாரிகள் மற்றும் பயிற்சி அதிகாரிகள் (2018, 2019, 2020, 2021 மற்றும் 2022 தொகுப்பு) மற்றும் இந்திய கடற்படையின் ஆயுதப் பணிப் பிரிவின் பயிற்சி அதிகாரிகள் இன்று (மார்ச் 29, 2023) குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவை சந்தித்தனர்.

தம்மைச் சந்தித்த இந்திய தகவல் பணி அதிகாரிகளிடம் உரையாற்றிய குடியரசுத் தலைவர், அரசின் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் தகவல் தொடர்பு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்று குறிப்பிட்டார். திறன் வாய்ந்த தகவல் தொடர்பு மற்றும் சரியான தகவல்களை வழங்குவதன் மூலம், இந்தியத் தகவல் பணி (IIS) அதிகாரிகள், மக்களை தகவல் அறிந்தவர்களாக மாற்ற முடியும் என்று அவர் தெரிவித்தார்.

தற்போது பலவிதமான தகவல் தொடர்பு அம்சங்கள் இருப்பதுடன் உடனுக்குடன் தகவல் தொடர்புக்கான வசதிகள் உள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். இந்தச் சூழலில் போலியான தகவல்களும் சமமான வேகத்தில் பரவக் கூடிய சவாலான நிலையும் உருவாகியுள்ளதாக குடியரசுத் தலைவர் தெரிவித்தார். போலிச் செய்திகளை எதிர்த்துப் போராடும் பொறுப்பை இந்தியத் தகவல் பணி (ஐஐஎஸ்) அதிகாரிகள் ஏற்று செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். ஊடகங்களை, குறிப்பாக சமூக ஊடகங்களை சிலர் தவறாகப் பயன்படுத்தும் போக்கைத் தடுக்க, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அர்ப்பணிப்புடன் செயல்படவேண்டும் எனவும் இந்திய தகவல் பணி அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் வலியுறுத்தினார்.

உலக அரங்கில் இந்தியாவின் செல்வாக்கை உயர்த்துவதில் இந்தியத் தகவல் பணி (ஐஐஎஸ்) அதிகாரிகள் முக்கியப் பங்காற்றுகின்றனர் என்று குடியரசுத் தலைவர் கூறினார். இந்தியா எப்போதும் அமைதி மற்றும் சகோதரத்துவத்தைப் பின்பற்றி அதை உலகிற்கு எடுத்துரைத்து வருகிறது என அவர் குறிப்பிட்டார். கலாச்சார தகவல்கள் மூலம் ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும், இந்தியாவின் மென்மையான அணுகுமுறைகளைப் பரப்புவதில் இந்தியத் தகவல் பணி அதிகாரிகள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் முக்கியமான பகுதியாக விளங்குவதாக அவர் தெரிவித்தார்.

இந்திய கடற்படையின் ஆயுதப் பணிப் பிரிவு அதிகாரிகளிடையே உரையாற்றிய குடியரசுத் தலைவர், இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படை ஆகிய இரண்டிற்கும் திறமையான மற்றும் பாதுகாப்பான ஆயுத தளவாட விநியோக முறையை வழங்குவதில் இந்தப் பிரிவினர் முக்கிய பங்கு வகிப்பதாகக் கூறினார். தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன் அதிநவீன ஆயுதங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம், உள்நாட்டுமயமாக்கலின் இலக்குகளை அடைவதில் இந்த அதிகாரிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக உற்பத்தியை உள்நாட்டு மயமாக்கல் முயற்சிகளில் நாம் அதிகம் சாதித்துள்ள போதிலும், இந்தியாவில் உற்பத்தி செய்வோம் (‘மேக் இன் இந்தியா’) என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப மேலும் அதிகம் செயலாற்ற வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட உபகரணங்களை நம் நாட்டிலேயே உற்பத்தி செய்வதன் மூலம் தற்சார்பின் புதிய கட்டத்தை தொடங்குவதற்கான நேரம் தற்போது வந்துள்ளது என்று குடியரசுத் தலைவர் கூறினார். கடற்படை ஆயுதத் துறையில் தற்சார்பை அடைவதற்கும் தற்சார்பு இந்தியா இயக்கத்தின் இலக்குகளை அடைந்து, அது தொடர்பான கனவை நனவாக்குவதற்கும் முழு பங்களிப்பை வழங்க வேண்டும் என்று இந்திய கடற்படையின் ஆயுதப் பணிப் பிரிவு அதிகாரிகளை ( INAS ) அவர் வலியுறுத்தினார்.

அதிகாரிகளின் பதவிகள் மிகுந்த பொறுப்புணர்வு கொண்டவை என்பதை எப்போதும் நினைவில் வைத்து செயல்பட வேண்டும் என குடியரசுத் தலைவர் அறிவுறுத்தினார். அவர்களின் ஒவ்வொரு செயல்பாடுகளும், முடிவுகளும் மக்களின் வாழ்க்கையில் நேரடியாகவோ, அல்லது மறைமுகமாகவோ தாக்கங்களை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார். எனவே, அதிகாரிகள், நாட்டின் வளர்ச்சி இலக்குகள் மற்றும் மக்களின் நல்வாழ்வைக் கருத்தில் கொண்டு செயலாற்ற வேண்டும் என்றும் குடியரசுத் தலைவர் திருமதி திரெளபதி முர்மு கூறினார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply