கர்நாடக சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தல்-2023 !

கர்நாடக சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. சட்டப்பேரவையின் ஐந்து ஆண்டு பதவிக்காலம் 2023 மே 24 அன்று நிறைவடைவதையடுத்து, இந்தத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் கால அட்டவணையின்படி 51 ரிசர்வ் தொகுதிகள் உள்பட 224 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. ரிசர்வ் தொகுதிகளில் 36, பட்டியல் வகுப்பினருக்கும், 15 பட்டியல் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. இம்மாநிலத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 5 கோடியே 24 லட்சத்து 11 ஆயிரத்து 557 ஆக உள்ளது.

தேர்தலுக்கான அரசிதழ் அறிவிக்கை 2023, ஏப்ரல் 13 அன்று வெளியிடப்படும். அதே நாளில் வேட்புமனு தாக்கல் தொடங்கும். வேட்புமனு தாக்கல் செய்ய 2023, ஏப்ரல் 20 கடைசி நாளாகும். அடுத்த நாள், ஏப்ரல் 21 அன்று வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். வேட்புமனுக்களை திரும்பப்பெற 2023 ஏப்ரல் 24 கடைசி நாளாகும். வாக்குப்பதிவு 2023 மே 10 அன்று நடைபெறும். 2023 மே 13 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

தேர்தலுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டதையடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. சம்பந்தப்பட்ட மாநிலத்தின் அனைத்து அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், ஆகியோருக்கு பொருந்தும். கர்நாடகா சம்பந்தப்பட்ட மத்திய அரசின் அறிவிப்புகள் மற்றும் கொள்கை முடிவுகளுக்கும் பொருந்துவதாகும்.

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்டிப்புடன் அமலாக்கவும், மீறுவோர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கவும் மாநில அரசை தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

திவாஹர்

Leave a Reply