பெண்களின் பொருளாதார பிரதிநிதித்துவத்தின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கான ஜி20 கூட்டணியின் இரண்டாவது கூட்டம் கேரளாவில் ஏப்ரல் 4-6 வரை நடைபெறுகிறது.

பெண்களின் வளர்ச்சி என்பது, சமூக நீதி சார்ந்த விஷயம் மட்டுமல்ல, பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்ததும் கூட. உலகின் ஒட்டுமொத்த உற்பத்தியில் சுமார் 80%மும், 75% சர்வதேச வர்த்தகமும், 60% உலக மக்கள் தொகையும் ஜி20 உறுப்பு நாடுகளில் பதிவாகின்றன. உலகளாவிய பொருளாதாரத்தில் அதன் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு எதிர்கால சர்வதேச பொருளாதார வளர்ச்சி மற்றும் செழிப்பைப் பாதுகாப்பதில் ஜி20 அமைப்பு உத்தி சார்ந்த பங்களிப்பை வழங்குகிறது. பெண்களின் வளர்ச்சி மற்றும் பாலின சமன்பாட்டை மேம்படுத்துவதிலும் இந்த அமைப்பிற்கு பெரும் பங்கு உள்ளது.

பெண்களின் பொருளாதார பிரதிநிதித்துவத்தின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கான (எம்பவர்) ஜி20 கூட்டணி என்பது, தனியார் துறையில் பெண்களின் தலைமைத்துவம் மற்றும் வளர்ச்சியை அதிகரிக்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட ஜி20 நாடுகளின் வர்த்தகத் தலைவர்கள் மற்றும் அரசுகளின் கூட்டணி ஆகும். இந்தியாவின் தலைமையிலான ஜி20 எம்பவர் 2023, பெண்களால் வழிநடத்தப்படும் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தும்.

இந்தக் குழுவின் முதல் கூட்டம் உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் பிப்ரவரி 11, 12-ஆம் தேதிகளில் நடைபெற்றது. இரண்டாவது கூட்டம், கேரள தலைநகரம் திருவனந்தபுரத்தில் ஏப்ரல் 4 முதல் 6-ஆம் தேதி வரை நடைபெறும்.

“பெண்களின் வளர்ச்சி: சமநிலை மற்றும் பொருளாதாரத்திற்கான வெற்றி” என்பது இரண்டாவது ஜி20 எம்பவர் கூட்டத்தின் கருப்பொருளாகும். பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக ஜி20 எம்பவர் கூட்டணி மேற்கொண்டுள்ள முயற்சிகள், திருவனந்தபுரத்தில் நடைபெறும் கூட்டத்தில் வலுப்படுத்தப்படும்.

மத்திய பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சித் துறை இணையமைச்சர் டாக்டர் முஞ்சபாரா மகேந்திரபாய் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுவார். ஜி20 எம்பவர் 2023 குழுவின் தலைவர் டாக்டர் சங்கீதா ரெட்டி, மத்திய பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி அமைச்சக செயலாளர் திரு இந்தேவர் பாண்டே, மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொள்வார்கள்.

எம்.பிரபாகரன்

Leave a Reply