மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம், மோட்ச தளங்கள் என்று அழைக்கப்படும் அயோத்தி, மதுரா, மாயா (ஹரித்வார்), காசி (வாரணாசி), காஞ்சி அவந்திகா (உஜ்ஜைன்), பூரி (ஒடிசா) மற்றும் துவாரவதி (துவாரகா, குஜராத்) நகரங்கள் உட்பட இந்தியாவின் சுற்றுலா தலங்கள் குறித்து விளம்பரப்படுத்துகிறது.. நாட்டின் பல்வேறு சுற்றுலா தலங்கள் மற்றும் தயாரிப்புகளை மேம்படுத்துவதற்காக மின்னணு, அச்சு மற்றும் டிஜிட்டல் ஊடகங்கள் மூலம் உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் விளம்பரப்படுத்தி வருகிறது. மேலும், சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் சமூக ஊடகப் பக்கங்களிலும் விளம்பரங்கள் செய்யப்படுகின்றன.
மேலும், மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம், அந்தந்த மாநில அரசுகள்/யூனியன் பிரதேசங்களுடன் கலந்தாலோசித்து அடையாளம் காணப்பட்ட புனித யாத்திரை மற்றும் பாரம்பரிய இடங்களை மேம்படுத்தும் நோக்கத்துடன், ‘தேசிய யாத்திரை புத்துயிர் மற்றும் ஆன்மீகம், பாரம்பரிய பெருக்க இயக்கம் (பிரஷாத்)’ திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்குகிறது.
சுற்றுலா உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் நிதி உதவியும் வழங்கப்படுகிறது. சுற்றுலாத் தளங்களை அடையாளம் காண்பது முக்கியமாக மாநில அரசுகளின் உரிமையாகும். நிதி இருப்பு, தகுந்த விரிவான திட்ட அறிக்கைகளை சமர்ப்பித்தல், திட்ட வழிகாட்டுதல்களை பின்பற்றுதல், முன்பு வெளியிடப்பட்ட நிதியின் பயன்பாடு போன்றவற்றின் அடிப்படையில் திட்டங்கள் அனுமதிக்கப்படுகின்றன. சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த ஸ்வதேஷ் தர்ஷன் திட்டம் SD 2.0 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் துவாரகா நகரம் மேம்பாட்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இது கலாச்சாரம், சுற்றுலா மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி நேற்று மாநிலங்களவையில் அளித்த பதிலாகும்.
திவாஹர்