பிரதமர் முத்ரா யோஜனா (பிஎம்எம்ஒய்) திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து 40.25 கோடிக்கும் மேற்பட்ட ரூ.22.95 லட்சம் கோடி மதிப்பில் கடன் வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் முத்ரா யோஜனா திட்டம் (பிஎம்எம்ஒய்) 2015-ம் ஆண்டு ஏப்ரல்  8-ம் தேதியன்று, கார்ப்பரேட் அல்லாத, பண்ணை சாரா சிறு மற்றும் குறு தொழில்முனைவோர் வருமானம் ஈட்டும் வகையில், ரூ.10 லட்சம் வரை பிணையில்லாமல் எளிதாக கடன் வழங்கும் நோக்கத்துடன் பிரதமர் திரு.நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (என்பிஎஃப்சிகள்), மைக்ரோ நிதி நிறுவனங்கள் (எம்எஃப்ஐகள்) மற்றும் இதர நிதி இடைத்தரகு நிறுவனங்கள் கடன் வழங்குகின்றன.

பிரதமர் முத்ரா யோஜனா திட்டத்தின் வெற்றிகரமான 8-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் கூறுகையில், “பிரதமர் திரு.நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ் கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டம் குறுந்தொழில் நிறுவனங்கள் எளிதாகவும், சிரமமில்லாமலும் கடனுதவி பெறவும், ஏராளமான இளம் தொழில் முனைவோர் தங்கள் தொழில்களை தொடங்கவும் உதவியுள்ளது” என்றார்.

அனைவரையும் நிதிக் கட்டமைப்பிற்குள் கொண்டு வந்த பிரதமர் முத்ரா யோஜனா திட்டத்தின் 8-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில், இத்திட்டத்தின் சில முக்கிய அம்சங்கள் மற்றும் சாதனைகளைப் பார்ப்போம்:

இத்திட்டம் மூன்று தூண்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவையாவன,

 • வங்கி சேவை இல்லாதவர்களுக்கு வங்கி சேவையை வழங்குதல்

• பாதுகாப்பற்றவர்களுக்கு பாதுகாப்பு அளித்தல்

• நிதியற்றவர்களுக்கு நிதியளித்தல்

அம்சங்கள்

•நிதியின் தேவை மற்றும் வணிகத்தின் முதிர்வு நிலை ஆகியவற்றின் அடிப்படையில் கடன்கள் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை சிஷூ (ரூ.50,000/- வரை கடன்), கிஷோர் (ரூ.50,000/-க்கு மேல் மற்றும் ரூ.5 லட்சம் வரை கடன்),  தருண் (ரூ.5 லட்சத்திற்கு மேல் மற்றும் ரூ.10 லட்சம் வரை கடன்).

•ஆர்பிஐ வழிகாட்டுதல்களின்படி கடன் வழங்கும் நிறுவனங்களால் வட்டி விகிதம் தீர்மானிக்கப்படுகிறது. செயல் முதலீட்டை பொறுத்தவரை, கடன்தாரர்  பெற்றிருக்கும்  கடன் தொகை  மீது நாட்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மட்டும் வட்டி விதிக்கப்படும்.

24.03.2023 வரை பிரதமர் முத்ரா யோஜனா திட்டத்தின் சாதனைகள்

• திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து ரூ.23.2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 40.82 கோடிக்கும் அதிகமான கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. மொத்தக் கடன்களில் ஏறத்தாழ 21% புதிய தொழில்முனைவோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

பெண் தொழில்முனைவோருக்கு மொத்தக் கடன்களில் தோராயமாக 69% கடன்களும், எஸ்சி/எஸ்டி/ஓபிசி பிரிவினருக்கு 51% கடன்களும் வழங்கப்பட்டுள்ளன.

இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து கொரோனா தொற்று காரணமாக 2020-21 நிதியாண்டு தவிர மற்ற ஆண்டுகளில் அதன் இலக்குகள் எட்டப்பட்டுள்ளன.

திவாஹர்

Leave a Reply