புதுதில்லியில் இன்று 31-வது கேந்திரிய சைனிக் வாரிய கூட்டத்திற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமை ஏற்றார். கேந்திரிய சைனிக் வாரியம் என்பது முன்னாள் படைவீரர்கள் நலனை உறுதி செய்வதற்கான மத்திய அரசின் உயர் அமைப்பாகும். முன்னாள் படைவீரர் நலன் மற்றும் மறுகுடியமர்த்தம் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய திரு ராஜ்நாத் சிங், முன்னாள் படைவீரர்கள் நாட்டின் சொத்துக்கள் என்று புகழாரம் சூட்டினர். நாட்டின் நலனுக்காக அவர்களது செழுமையான நடைமுறை அனுபவத்தை பயன்படுத்திக்கொள்ளும் புதிய வழிகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வகுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். பல மாநிலங்களில் முன்னாள் படைவீரருக்காக வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதை சுட்டிக்காட்டிய அவர், இதனை முழுமையாக பின்பற்றுவதுடன், கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
படைவீரர்களின் நலனைப் பொருத்தவரை மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்றி வருவது பாராட்டத்தக்கது என்று கூறிய பாதுகாப்புத்துறை அமைச்சர், கேந்திரிய சைனிக் வாரியம் மேற்கொள்ளும் பணிகள் கூட்டாட்சி கூட்டுறவுக்கு ஒரு ஒளிரும் உதாரணம் என்று கூறினார்.
மாநிலங்கள் அல்லது அரசியல் கட்சிகளுக்கு இடையே பல விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அது ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடியது. ஆனால் நமது வீரர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களின் நலன் என்று வரும் போது அனைவரும் ஒரே கருத்தில் இருப்பதை காணலாம். நமது வீரர்களுக்கு எப்போதும் சமூக மற்றும் அரசியல் கருத்தொற்றுமை உள்ளது. ஆயுதப்படைகள் நாடு முழுவதும் சமமாக பாதுகாக்கின்றன. அவர்களது நலன்களை பாதுகாப்பதையும், ஓய்வுக்கு பின்னர் கண்ணியமான வாழ்க்கையை மேற்கொள்வதையும் உறுதி செய்வது நமது தேசிய கூட்டுப் பொறுப்பாகும் என்று அவர் கூறினார்.
எம்.பிரபாகரன்