தமிழக அரசு, பட்டாசு ஆலைகளில் ஏற்படும் வெடி விபத்துகள் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்!-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

தமிழக அரசு பட்டாசுத் தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாக்கும் விதமாக தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது.

மேலும் தீவிர காயமடைந்த இரண்டு தொழிலாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதும் வேதனை அளிக்கிறது.தமிழக அரசு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களுக்கு தீவிர, உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்கவும், விரைவில் குணமடையவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசு உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையும், சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களுக்கு உதவித்தொகையும் வழங்க வேண்டும்.

தமிழகத்தில் பட்டாசு ஆலைகளில் அவ்வப்போது ஏற்படும் வெடி விபத்து, தீ விபத்து ஆகியவற்றுக்கான காரணத்தை கண்டறிய வேண்டும்.பட்டாசுத் தொழில் சம்பந்தமாக உரிய விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதில் தமிழக அரசின் நடவடிக்கைகள் முழுமை பெற வேண்டும்.

பட்டாசு ஆலைகளின் உரிமையாளர்களிடம் ஆலைகள் மற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள வலியுறுத்த வேண்டும்.பட்டாசுத் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களின் குடும்ப நலனை கவனத்தில்கொண்டால் அவர்களின் பாதுகாப்பான பணிக்கும், வாழ்வுக்கும் பட்டாசு ஆலைகளின் உரிமையாளர்களும், தமிழக அரசும் தான் பொறுப்பு.

எனவே பட்டாசு ஆலைகளை தொடர்ந்து கண்காணித்து பட்டாசுத் தொழிலையும், தொழிலாளர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்துகொள்ள வேண்டியது தமிழக அரசின் கடமை.
உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு த.மா.கா சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சி.கார்த்திகேயன்

Leave a Reply