இந்திய கடற்படையின் பணியாளர் சேவை கட்டுப்பாட்டாளராக வைஸ் அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்றுக்கொண்டார்.

வைஸ் அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் ஏப்ரல் 17-ந் தேதி இந்திய கடற்படையின் பணியாளர் சேவைகளின் கட்டுப்பாட்டாளராகப் பொறுப்பேற்றார். 1987-ம் ஆண்டு  ஜூலை 1-ந் தேதி  பணியில் சேர்ந்த அவர், தகவல் தொடர்பு மற்றும் மின்னணுப் போர்களில் நிபுணராவார். அவர் கடக்வாஸ்லா தேசிய பாதுகாப்பு அகாடமியின்  முன்னாள் மாணவர் ஆவார். இங்கிலாந்தின் ஸ்ரீவென்கம் இணைப்படைப்பிரிவு கல்லூரி, கராஞ்சா கடற்படை கல்லூரி, அமெரிக்காவின் நியூபோர்ட் கடற்படை கல்லூரி ஆகியவற்றில் அவர்  பயின்று தேர்ச்சிபெற்றார்.

 அதி விஷிஷ்ட் சேவா பதக்கம், விஷிஷ்ட் சேவா பதக்கம் ஆகியவற்றைப் பெற்ற அவர், ஏவுகணைக் கப்பல்களான ஐஎன்எஸ் வித்யுத், ஐஎன்எஸ் வினாஷ், ஐஎன்எஸ் குலிஷ்; வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்பான் ஐஎன்எஸ் மைசூர்; விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ரமாதித்யா ஆகியவற்றில் அவர் பணியாற்றியுள்ளார்.

 பதவி உயர்வு பெற்று, கொச்சியில் உள்ள தெற்கு கடற்படை தலைமையகத்தின் தலைமைப் பணியாளர் அதிகாரியாக (பயிற்சி) அவர் பணியாற்றினார். இந்திய கடற்படையில் அனைத்து பயிற்சிகளையும் நடத்துவதில் முக்கியப் பங்கு வகித்தார். பல்வேறு பதவிகளை வகித்த அவர், மேற்கு கடற்படை கமாண்டிங் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தார்.

அட்மிரல் சுவாமிநாதனின் கல்வித் தகுதிகளில் புது தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இளநிலை அறிவியல் பட்டம்; கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் தொலைத்தொடர்புகளில் முதுநிலை அறிவியல் பட்டம்; லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியில் பாதுகாப்புப் படிப்பில் எம்.ஏ; மும்பை பல்கலைக்கழகத்தில் உத்தி ஆய்வுகளில் எம்ஃபில்; மும்பை பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆய்வுகளில் முனைவர் பட்டங்களை அவர் பெற்றுள்ளார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply