கோவாவில் 2023 ஏப்ரல் 17ல் தொடங்கி ஜி20 சுகாதாரப் பணிக்குழுவின் இரண்டாவது கூட்டம் நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 19 வரை நடைபெறும் இந்தக் கூட்டத்தில் ஜி20 உறுப்பு நாடுகள், விருந்தினர் நாடுகள், சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். கோவாவின் பாஞ்ஜிமில் மக்கள் மருந்தக மையத்தை ஓமன், ஜப்பான், ரஷ்யா, நைஜீரியா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட ஜி20 நாடுகள், யுனிசெஃப், பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா பார்வையிட்டார்.
இந்த மையத்தின் உரிமையாளரும் பெண் தொழில் முனைவோருமான திருமதி பிரபா மேனனுடன் கலந்துரையாடிய அமைச்சர் அவரது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். இதே போன்ற திட்டத்தை தங்கள் நாடுகளில் அமல்படுத்துவதற்கு பல பிரதிநிதிகள் ஆர்வம் காட்டினர். இந்தத் திட்டத்தில் ஆர்வம் காட்டும நடுத்தர வருவாய் மற்றும் குறைந்த வருவாய் நாடுகளுக்கு உதவி செய்வது பற்றி மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
கடந்த ஒன்பது ஆண்டுகளில் இத்தகைய மையங்கள் 100 மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது 2014 ல் 80 ஆக இருந்த மையங்களின் எண்ணிக்கை தற்போது 9,300 ஆக உள்ளது. இதன் மூலம் கடந்த ஒன்பது ஆண்டுகளில் குடிமக்களால் சுமார் 20,000 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளதாக மதிப்பீடப்பட்டுள்ளது.
திவாஹர்