பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 2023 ஆம் ஆண்டு ஜூன் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் புதுதில்லியில் அமெரிக்க மற்றும் ஜெர்மன் பாதுகாப்புத்துறை அமைச்சர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இரு நாடுகளுடனும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்படும்

பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங்குடன் இருதரப்பு பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் திரு. லாயிட் ஆஸ்டின் மற்றும் ஜெர்மனியின் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் திரு போரிஸ் பிஸ்டோரியஸ் ஆகியோர் புது தில்லிக்கு வருகை தரவுள்ளனர். அமெரிக்க பாதுகாப்பு அமைச்சருடனான பாதுகாப்பு துறை அமைச்சரின் சந்திப்பு ஜூன் 05, 2023 அன்று நடைபெறும். ஜெர்மனியின் மத்திய பாதுகாப்பு அமைச்சருடன் ஜூன் 06 அன்று பேச்சுவார்த்தை நடைபெறும். இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த விஷயங்கள் மற்றும் தொழில்துறை ஒத்துழைப்பில் கவனம் செலுத்துவது குறித்தும் இந்த சந்திப்புகளின்  போது விவாதிக்கப்படும்.

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் இரண்டு நாள் பயணமாக சிங்கப்பூரில் இருந்து ஜூன் 4 ஆம் தேதி வரவுள்ளார். இது அமைச்சர் ஆஸ்டினின் இரண்டாவது இந்திய வருகையாகும்.  இதற்கு முன் மார்ச் 2021இல் அவர் இந்தியா வந்துள்ளார்.

ஜெர்மன் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஜூன் 05 ஆம் தேதி முதல் நான்கு நாள் பயணமாக இந்தியாவுக்கு வருகை தருகிறார். இந்தோனேசியாவில் இருந்து அவர் இந்தியா வருகிறார். பாதுகாப்புத்துறை அமைச்சருடனான சந்திப்பைத் தவிர, புதுதில்லியில் பாதுகாப்புத் துறைக்கான புதுமைக் கண்டுபிடிப்புகள்(ஐடெக்ஸ்) ஏற்பாடு செய்யும் நிகழ்வில் திரு போரிஸ் பிஸ்டோரியஸ் கலந்து கொள்கிறார். அப்போது அவர் சில பாதுகாப்பு புத்தொழில் முனைவோரை சந்திக்கவுள்ளார். ஜூன் 07 ஆம் தேதி, மும்பை செல்லும் அவர், அங்கு தலைமையகம், மேற்கு கடற்படை தளம் மற்றும் மாசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் ஆகியவற்றைப் பார்வையிடக்கூடும்.

திவாஹர்

Leave a Reply