மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக அரசும், மாநகராட்சியும் தொய்வில்லாமல் மீட்புப் பணியை மேற்கொள்ள வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

மிக்ஜாம் புயல் தாக்கத்தின் காரணமாக சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் நேற்று முன்தினம் பெய்த மிக கடுமையான மழை இதுவரை காணாத அளவிற்கு மிக அதிகமாக பெய்துள்ளது.

பல்வேறு இடங்களில் தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்து மக்கள் மிகவும் சிரமத்திற்காளாகினர். இந்த அசாதாரண சூழலில் 24 மணி நேரத்திற்குப் பிறகும் தண்ணீர் குறையவில்லை. பாதிக்கப்பட்ட இடங்களில் மக்கள் மின்சாரம் இன்றி, குடிக்க தண்ணீர் இன்றி, உணவின்றி மிகவும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளார்கள் என்று வெவ்வேறு பகுதிகளில் இருந்து வரும் செய்தி மிகவும் வருத்தம் அளிக்கிறது.

மாநகராட்சி அதிகாரிகளும், பணியாளர்களும் பணியை மேற்கொண்ட போதும் பல இடங்களில் மீட்பு பணி மிகவும் தொய்வாக இருப்பதாக தெரிகிறது. எனவே தமிழக அரசு போர்கால அடிப்படையில் ஒரு காலக் கெடுவுக்குள் அவசரப் பணியாக மேற்கொண்டு முடிக்க வேண்டும். அதுவரை பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்க இடமும், சுகாதார முறையில் குடிநீரும், உணவும், மருத்துவ உதவிகளையும் வழங்க வேண்டும்

சென்னையில் பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் மின் இணைப்பு வழங்கப்பட்வில்லை. உடனடியாக உரிய பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொண்டு உரிய ஆய்வு மேற்கொண்டு மின் இணைப்பு வழங்க வேண்டும். தண்ணீர் தேங்கியுள்ளப் பகுதியில் தண்ணிரை அப்புறப்படுத்தக் கூடிய பணியை தொய்வில்லாமல் மேற்கொள்ள வேண்டும்.

மத்திய அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் மத்திய நிவாரண உதவியை உடனடியாக தமிழகத்திற்கு வழங்க வேண்டும். தமிழ் மாநில காங்கிரஸ், மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள், மாநில துணை அமைப்பு தலைவர்கள். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சி.கார்த்திகேயன்

Leave a Reply