இந்திய தர நிர்ணய அமைவனத்தின் (பி.ஐ.எஸ்) 77-வது நிறுவன தின நிகழ்ச்சியில் மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் இன்று (06-01-2024) பங்கேற்று தலைமை உரையாற்றினார். பி.ஐ.எஸ் மற்றும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (டி.பி.ஐ.ஐ.டி) இணைந்து ‘இந்தியாவில் தர சூழல் அமைப்பை வலுப்படுத்துவதற்கான உரையாடல்’ என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், தரநிலைகளை சர்வதேச தரங்களுக்கு இணையாக மாற்ற வேண்டும் என்று கூறினார். சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் ஆலோசனைகளைப் பெறுவதன் மூலம் இதை அடைய முடியும் என்று அவர் தெரிவித்தார்.
ஹால்மார்க் நகைகள் தொடர்பாக, பி.ஐ.எஸ்.ஸின் முயற்சிகளைப் பாராட்டிய திரு பியூஷ் கோயல், கட்டாய ஹால்மார்க் முத்திரை 343 மாவட்டங்களில் நடைமுறையில் உள்ளது என்பதை சுட்டிக்காட்டினார்.
2014-ம் ஆண்டு வரை 106 பொருட்களுக்கு 14 தரக்கட்டுப்பாட்டு உத்தரவுகள் மட்டுமே இருந்தன எனவும் ஆனால், இப்போது, 672 தயாரிப்புகளுக்கு 156 தரக் கட்டுப்பாட்டு உத்தரவுகள் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார். பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டை வழிநடத்தும் கடந்த சில ஆண்டுகளில்தான் 90 சதவீத தரக்கட்டுப்பாட்டு உத்தரவுகள் கொண்டுவரப்பட்டதாக திரு பியூஷ் கோயல் கூறினார். இளம் தலைமுறையினர் தரம் மற்றும் வளர்ச்சி அடைந்த பாரதத்தின் தூதர்களாக மாற வேண்டும் என்று அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.
எஸ்.சதிஸ் சர்மா