குஜராத் சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரம் (கிஃப்ட் சிட்டி) இந்தியாவின் நிதி மற்றும் முதலீட்டு மையத்திற்கான நுழைவாயிலாகத் திகழ்கிறது என்று மத்திய நிதி, பெருநிறுவனங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். காந்திநகரில் இன்று (11.01.2024) 10-வது துடிப்புமிக்க குஜராத் உலகளாவிய உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்ட ‘கிஃப்ட் சிட்டி-நவீன இந்தியாவின் விருப்பம் ‘ என்ற கருத்தரங்கில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறினார். 2047-க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறுவதற்கான தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
பிரதமர் திரு நரேந்திர மோடி 2007-ம் ஆண்டில் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது கிஃப்ட் சிட்டி என்ற எண்ணத்தை உருவாக்கினார் என்றும், இப்போது அது ஒரு பெரிய சர்வதேச நிதி மையமாக விரிவடைந்துள்ளது என்றும் மத்திய நிதியமைச்சர் கூறினார்.
பசுமை தொழில்நுட்பத்தின் அடிப்படையில் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை விளக்கிய திருமதி சீதாராமன், கிஃப்ட் சிட்டி பசுமை கடன்களுக்கான தளமாக இருக்க வேண்டும் என்று கூறினார். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் பொருளாதாரம் 30 டிரில்லியன் டாலராக மாற வேண்டும் என்ற இலக்கை அடைய பல்வேறு ஃபின்டெக் ஆய்வகங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொள்ள வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் மேலும் கூறினார்.
சர்வதேச நிதிச் சேவை மையங்களில் வளர்ந்து வரும் செயல்பாடுகளை பட்டியலிட்ட திருமதி சீதாராமன், கிஃப்ட் சிட்டியில் இப்போது 9 வெளிநாட்டு வங்கிகள், 25 வங்கிகள், 80 நிதி மேலாளர்கள், 50 தொழில்முறை சேவை வழங்குநர்கள், 40 நிதிநுட்ப நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தொழில்நுட்பம், நிதி சூழலின் ஒருங்கிணைப்பாக கிஃப்ட் சிட்டியை விவரித்த மத்திய நிதியமைச்சர், தொழில்நுட்பத்தின் நன்மைகளை நிதிச் சேவைகளில் புகுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்றும், உலகளாவிய நிதியை அணுகுவதில் இந்தியாவின் தொழில்முனைவோருக்கு நன்மைகளை வழங்க கிஃப்ட் சிட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். பெரும்பாலான உலகளாவிய நிதி மையங்கள் முன்பு மூலதனத்தை மட்டுமே பார்த்தன, ஆனால் கிஃப்ட் சிட்டி தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்ட நிதி சேவைகளைப் பெற்ற பெருமைக்குரியது என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
எம்.பிரபாகரன்