மதுராந்தகம் ஏரியை ஏரி சீரமைப்பு பணிகளை விரைவுபடுத்த வேண்டும்!- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.

தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான மதுராந்தகம் ஏரியை தூர்வாரி சீரமைக்கும் பணிகள் தொடங்கி இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும், இன்று வரை அந்தப் பணிகள் நிறைவடையவில்லை. மதுராந்தகம் ஏரி பராமரிப்பு பணிகள் காரணமாக மூன்றாண்டுகளாக உழவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எப்போது தான் மீண்டும் உழவைத் தொடங்க முடியுமோ? என்ற மன உளைச்சலில் உழவர்கள் ஆழ்ந்துள்ளனர்.

பொன்னியின் செல்வன் என்று போற்றப்பட்ட இராஜராஜ சோழனின் மூத்த சகோதரரான மதுராந்தகன் என்றழைக்கப்பட்ட உத்தமசோழனின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட மதுராந்தகம் ஏரியின் மொத்த பரப்பளவு 2908 ஏக்கர் ஆகும். இதில் 2231 ஏக்கர் பரப்பு நீர்த்தேக்கப் பகுதியாக உள்ளது. மதுராந்தகம் ஏரியின் மொத்தக் கொள்ளளவு 694 மில்லியன் கன அடி ஆகும். ஆனால், பல ஆண்டுகளாக ஏரி தூர்வாரப்படாத நிலையில், கொள்ளளவு பாதியாக குறைந்து விட்டது. மழைக்காலத்தில் நிரம்பி வழியும் ஏரி, கோடைக்காலத்தில் வறண்டு விடும் அளவுக்கு கொள்ளளவு குறுகி விட்டது. இந்த நிலையை மாற்றி ஏரியை முழுமையாகத் தூர்வாரி, முழுக் கொள்ளளவை மீட்டெடுப்பதுடன், அதில் கிடைக்கும் மண்ணைக் கொண்டு கரைகளை வலுப்படுத்துவதன் மூலம் ஏரியின் கொள்ளளவை 791 மில்லியன் கன அடியாக அதிகரிப்பதற்கான திட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. அத்திட்டத்திற்காக 2021&ஆம் ஆண்டு பிப்ரவரியில் ரூ.120 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, ஜூன் மாதத்தில் பணிகள் தொடங்கின.

ஆனால், பணிகள் தொடங்கப்பட்டு 30 மாதங்களுக்கு மேலாகியும் இன்று வரை பணிகள் நிறைவடைய வில்லை. வரும் ஜூன் மாதத்திற்குள் பணிகளை முடித்து, அடுத்து வரும் வடகிழக்கு பருவமழையின் போது கிடைக்கும் நீரை தேக்கி வைக்க வேண்டும் என்பது தான் திட்டம் ஆகும். அதன்படி பணிகளை முடிக்க இன்னும் 5 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் 50% பணிகள் கூட இன்னும் நிறைவடைய வில்லை. மதுராந்தகம் ஏரியின் கரைகளை உயர்த்தி கான்க்ரீட் சுவர் அமைக்கும் பணிகள் மட்டுமே இப்போது நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் முடிவடைந்த பிறகு தான் தூர் வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த பணிகள் அனைத்தையும் ஜூன் மாதத்திற்குள் முடிக்க முடியாது.

மதுராந்தகம் ஏரியில் தேக்கி வைக்கப்படும் நீரைக் கொண்டு கடப்பேரி, கத்திரிச்சேரி, மதுராந்தகம் உட்பட 36 கிராமங்களில், மொத்தம் 2,853 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மதுராந்தகம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் அருங்குணம், மாரிபுத்தூர், திருவாதூர், நெசப்பாக்கம், கடுக்கப்பட்டு பெரிய ஏரி, நெல்வாய்பாளையம், மேல்பட்டு, மலையம்பாக்கம், பொன்னேரிதாங்கல் உள்ளிட்ட, 30 ஏரிகளில் நீர் நிரப்பி வைக்கப்பட்டு, அதைக் கொண்டு 4,000 ஏக்கருக்கும் கூடுதலான நிலங்கள் பாசன வசதி பெருகின்றன. மதுராந்தகம் ஏரியை தூர்வாரும் பணிகள் முடிவடைந்த பிறகு அதன் கொள்ளளவு 791 மில்லியன் கன அடியாக உயரும் என்பதால் பாசன வசதி பெறும் நிலங்களின் பரப்பும் அதிகரிக்கும். இந்தப் பணிகள் ஜூன் மாதத்திற்குள் முடிவடையாது என்பதால், தொடர்ந்து நான்காவது ஆண்டாக அடுத்த வேளாண் ஆண்டும் உழவும், உழவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும்.

சீரமைப்புப் பணிகள் காரணமாக எப்போதும் நீர் நிரம்பி காணப்படும் மதுராந்தகம் ஏரி இப்போது வறண்ட பாலைவனம் போல காட்சியளிக்கிறது. இதனால் வேளாண்மை மட்டுமின்றி குடிநீர் வழங்கலும் பாதிக்கப்பட்டிருக்கிறது. மதுராந்தகம் ஏரியை நம்பி முப்போகம் சாகுபடி செய்து வந்த விவசாயிகள், வாழ்வாதாரத்தையும் இழந்து, குடிநீருக்கும் திண்டாடும் நிலைமை இனியும் தொடர அனுமதிக்கக்கூடாது.

பல்லாயிரக்கணக்கான உழவர்களின் வாழ்வாதாரமாக திகழும் மதுராந்தகம் ஏரியை தூர்வாரி, சீரமைக்கும் பணிகள் விரைவுபடுத்தபட வேண்டும். வரும் ஜூன் மாதத்திற்குள் பணிகளை முடிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், வரும் அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவாவது மதுராந்தகம் ஏரியை சீரமைக்கும் பணிகளை நிறைவு செய்ய வேண்டும். இந்தப் பணிகளை விரைவுபடுத்துவதற்கான கண்காணிப்பு பொறியாளர் நிலையிலுள்ள மூத்த அதிகாரி ஒருவரை சிறப்பு அதிகாரியாக நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எஸ்.திவ்யா

Leave a Reply