இமாச்சலப் பிரதேசத்தின் தர்மசாலாவில் இன்று மத்திய பல்கலைக்கழகத்தின் 7-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், மாற்றம் என்பது இயற்கையின் விதி என்று கூறினார். ஆனால், மாற்றத்தின் வேகம் கடந்த காலங்களில் அவ்வளவு விரைவாக இல்லை. இன்று நாம் நான்காவது தொழில் புரட்சியின் சகாப்தத்தில் இருக்கிறோம். செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் போன்ற புதிய துறைகள் வேகமாக உருவாகி வருகின்றன. மாற்றத்தின் வேகம் மற்றும் அளவு இரண்டும் மிக அதிகமாக உள்ளன. இதன் காரணமாக தொழில்நுட்பம் மற்றும் தேவையான திறன்கள் மிக விரைவாக மாறி வருகின்றன. 21-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அடுத்த 20 அல்லது 25 ஆண்டுகளில் மக்களுக்கு என்ன வகையான திறன்கள் தேவைப்படும் என்று யாருக்கும் தெரியாது. இதேபோல், பல தற்போதைய திறன்கள் எதிர்காலத்தில் இனி பயனுள்ளதாக இருக்காது. எனவே, நாம் தொடர்ந்து புதிய திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். நமது கவனம் நெகிழ்வான மனதை வளர்ப்பதில் இருக்க வேண்டும், இதனால் இளைய தலைமுறையினர் வேகமாக மாறிவரும் சூழல்களுக்கு ஈடுகொடுக்க முடியும். 21-ம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ள மாணவர்களைத் தயார்படுத்தும் வகையில், அவர்களிடையே கற்கும் ஆர்வத்தை நாம் வலுப்படுத்த வேண்டும் என்று கூறினார்.
ஆசிரியர்களிடையே உரையாற்றிய குடியரசுத் தலைவர், மாணவர்களுக்கு அளிக்கப்படும் கல்வி, அது அவர்களை தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்றி, அவர்களின் பண்பு மற்றும் ஆளுமையை வளர்க்கும் வகையில் இருக்க வேண்டும் என்று கூறினார். மாணவர்களிடையே அவர்களின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் நாகரிகம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் கல்வியின் நோக்கமாகும். இந்த விஷயத்தில் ஆசிரியர்களின் பங்கு மிகவும் முக்கியமானது என்று அவர் வலியுறுத்தினார். அவர்களின் பணி நோக்கம் கற்பித்தலுடன் மட்டுப்படுத்தப்படவில்லை. அதே சமயம் தேசத்தின் எதிர்காலத்தை கட்டியெழுப்பும் மிகப்பெரிய பொறுப்பு அவர்களுக்கு உள்ளது என்று அவர் கூறினார்.
‘எதைக் கற்க வேண்டும்’, ‘எப்படிக் கற்றுக் கொள்வது’ என்பதில் நமது கவனம் இருக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் வலியுறுத்தினார். மாணவர்கள் எந்த மன அழுத்தமும் இல்லாமல் சுதந்திரமாக கற்கும்போது, அவர்களின் படைப்பாற்றல் மற்றும் கற்பனை சிறகடித்துப் பறக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். அப்படியானால் அவர்கள் கல்வியை வாழ்வாதாரத்தின் அவசியமாக மட்டும் கருதவில்லை. மாறாக, அவர்கள் புதுமைகளைப் புகுத்துகிறார்கள், பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காண்கிறார்கள், ஆர்வத்துடன் கற்றுக்கொள்கிறார்கள் என்றார் அவர்.
மாணவர்களிடையே உரையாற்றிய குடியரசுத் தலைவர், ஒவ்வொரு மனிதனிடமும் நன்மை மற்றும் தீமை ஆகிய இரண்டையும் காணும் திறன் உள்ளது என்று கூறினார். அவர்கள் எவ்வளவு கடினமான சூழ்நிலையில் இருந்தாலும், தீமை அவர்களை ஆதிக்கம் செலுத்த ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தினார். அவர்கள் எப்போதும் நன்மையின் பக்கம் நிற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட. இரக்கம், மனசாட்சி மற்றும் உணர்திறன் போன்ற மனித விழுமியங்களை தங்கள் லட்சியங்களாக மாற்றுமாறு அவர் வலியுறுத்தினார். இந்த மதிப்புகளின் அடிப்படையில், அவர்கள் வெற்றிகரமான மற்றும் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ முடியும் என்று அவர் கூறினார்.
இளைஞர்கள் வளர்ச்சிக்கான அபரிமிதமான ஆற்றலைக் கொண்டுள்ளனர். வளர்ச்சியடைந்த இந்தியாவின் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான மிக முக்கியமான இணைப்பாக அவை உள்ளன. எனவே, அவர்கள் நாட்டுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். இது அவர்களின் மனித, சமூக மற்றும் தார்மீகக் கடமை மட்டுமல்ல, குடிமக்களாக அவர்களின் கடமையும் கூட என்று குடியரசுத் தலைவர் சுட்டிக்காட்டினார்.
திவாஹர்