ஜோர்டான் ஆயுதப்படை பயிற்சி தூதுக்குழு கொச்சி தெற்கு கடற்படை கட்டளை தளம் மற்றும் இந்திய கடற்படை அகாடமிக்கு வருகை.

கமாண்டர் ஹசிம் ஐ மைத்தா தலைமையிலான மூன்று உறுப்பினர் ஜோர்டான் ஆயுதப்படை (ஜேஏஎஃப்) பயிற்சி தூதுக்குழு ஏப்ரல் 29 முதல் மே 4-ம் தேதி  வரை கொச்சியில் உள்ள தெற்கு கடற்படை கட்டளை மற்றும் எழிமலாவில் உள்ள இந்திய கடற்படை அகாடமிக்கு வருகை புரிந்தது. மார்ச் 23-ல் இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த இரண்டாவது ஆலோசனைக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட முடிவின்படி, ராணுவ பயிற்சி பரிமாற்றங்களை நோக்கமாகக் கொண்டது இந்த முதல் பயணம். கொச்சியில் உள்ள தெற்கு கடற்படை கட்டளை (எஸ்.என்.சி.)யின் தொழில்முறை பயிற்சிப் பள்ளிகளில் உள்ள பல்வேறு பயிற்சி வசதிகளை பிரதிநிதிகள் பார்வையிட்டனர். சிமுலேட்டர்களுடன் பரிச்சயம், தொழில்முறை கலந்துரையாடல்கள் மற்றும் விபிஎஸ்எஸ் & டைவிங் நடவடிக்கைகள் பற்றிய செயல்விளக்கம் ஆகியவை இதில் முக்கிய அம்சங்களாகும். உள்நாட்டு விமானம் தாங்கி போர்க்  கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் மற்றும் கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் கப்பல் பழுதுபார்க்கும் வசதிகளின் வழிகாட்டுதல் சுற்றுப்பயணமும் நடத்தப்பட்டது. இந்திய கடற்படை மற்றும் ஜோர்டான் ஆயுதப் படைகளுக்கு இடையே கடற்படை பயிற்சி மற்றும் தொழில்முறை படிப்புகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் குறித்து தெற்கு கடற்படை கட்டளையின் தலைமை பயிற்சி கமாண்டர் ஸ்ரீதானு குருவுடன் பிரதிநிதிகள் கலந்துரையாடினர்.

இந்திய கடற்படை அகாடமியில், கமாண்டன்ட் வைஸ் அட்மிரல் வினீத் மெக்கார்டியை தூதுக்குழு சந்தித்து, பயிற்சி முறைகள், தலைமைத்துவ உத்திகள் மற்றும் செயல்பாட்டு அனுபவங்கள் பற்றிய நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொண்டது. அகாடமியின் அதிநவீன பயிற்சி வசதிகள் குறித்த நுண்ணறிவு அவர்களுக்கு வழங்கப்பட்டதுடன், சிறந்த நடைமுறைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. ஜோர்டான் ஆயுதப்படை பயிற்சி தூதுக்குழுவின் வருகை, இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு என்ற பெரிய வரம்பின் கீழ், இந்திய கடற்படை மற்றும் ஜோர்டான் ஆயுதப்படைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை நோக்கிய குறிப்பிடத்தக்க முயற்சியைக் குறிக்கிறது.

எம்.பிரபாகரன்

Leave a Reply