சுரங்க அமைச்சகம், தன்பாத்தில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் – இந்திய சுரங்கப் பள்ளியுடன் இணைந்து மாநில சுரங்கக் குறியீடு குறித்த ஒருநாள் பயிலரங்கை வெற்றிகரமாக ஏற்பாடு செய்திருந்தது. ஒரு மாநிலத்திற்குள் சுரங்கத் தொழிலை எளிமையாக்குவது தொடர்பான பல்வேறு அம்சங்களை சுரங்கத் துறையின் பங்குதாரர்கள் புரிந்து கொள்ள இந்தக் குறியீடு ஒரு கருவியாக இருக்கும்.
இந்த பயிலரங்கிற்கு சுரங்க அமைச்சக செயலாளர் திரு வி.எல்.காந்த ராவ் தலைமை தாங்கினார். ராவ் தனது முக்கிய உரையில், சுரங்கத் துறையின் வளர்ச்சியில் மாநிலங்களின் முயற்சிகள் கொள்கை விளக்கத்தில் முறையாக பிரதிபலிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மாநிலங்களுக்கு இடையே கூட்டுறவு கூட்டாட்சி முறையையும், போட்டியையும் ஊக்குவிக்கும் வகையில் மாநில சுரங்கக் குறியீட்டை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். இந்த நடவடிக்கையை வெற்றிகரமாக்குவதில் மாநிலங்களின் தீவிரப் பங்களிப்பு முக்கியமானது என்று வலியுறுத்திய அவர், புள்ளிவிவர அறிக்கைகளை உரிய நேரத்தில் முறையாக சமர்ப்பிப்பதன் மூலம் தரவு சேகரிப்பு முயற்சிகளுக்கு மாநிலங்கள் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்தப் பயிலரங்கில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் கொள்கை வகுப்பாளர்கள், நிர்வாகிகள் மற்றும் பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர். 26 மாநிலங்களைச் சேர்ந்த முதன்மைச் செயலாளர்கள், இயக்குநர்கள் மற்றும் பிற அதிகாரிகள் இந்தப் பயிலரங்கில் ஆர்வத்துடன் பங்கேற்று, குறியீட்டு கட்டமைப்பு மற்றும் வழிமுறையின் ஒரு பகுதியாக உள்ள செயல்திறன் குறியீடுகள் மற்றும் துணைக் குறியீடுகள் குறித்து விவாதித்து இறுதி செய்தனர். மாநிலங்களின் ஆலோசனைகள் மற்றும் பின்னூட்டங்களுக்குப் பிறகு, மாநில சுரங்கக் குறியீட்டின் கட்டமைப்பு இறுதி செய்யப்பட்டு 2025 ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் உண்மையான தரவரிசைக்காக வரும் ஜூலை மாதம் வெளியிடப்படும்.
எஸ்.சதிஸ் சர்மா